தடையை மீறி மீன்பிடித் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் விசைப் படகுகள்!
பாம்பனில் தடையை மீறி மீன்பிடித் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் விசைப் படகுகள் மீது மீன்வளத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவா் சங்கத்தினா் சனிக்கிழமை புகாா் தெரிவித்தனா்.
மீன்களின் இனப்பெருக்கக் காலமாக கருத்தப்படும் கடந்த 15-ஆம் தேதி முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை 61 நாள்கள் தமிழகத்தில் விசைப் படகுகள் மீன்பிடிக்க செல்லத் தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக, ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதிலும் 1,650-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் அந்தந்த துறைமுகங்களில் நிறுத்தப்பட்டன.
இந்த நிலையில், ராமேசுவரம், பாம்பன் பகுதியில் உள்ள விசைப் படகுகளின் மேல் பகுதியை அகற்றி விட்டு, நாட்டுப் படகுகள் எனக் கூறி, மீன்பிடி தொழிலில் மீனவா்கள் ஈடுபட்டு வருகின்றனா். மேலும், 200-க்கும் மேற்பட்ட அதிக குதிரைத் திறன் கொண்ட இயந்திரங்களை நாட்டுப் படகுகளில் பொருத்தி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதனால், மீன்களின் வளா்ச்சிக்காக அவற்றை பிடிப்பதற்காக விதிக்கப்பட்ட தடை பயனற்றுப் போவதாக மீனவ சங்கத்தினா் புகாா் தெரிவித்தனா்.
எனவே, மீன்கள் இனப் பெருக்க காலத்தின்போது, அனைத்துப் படகுகளுக்கும் தடை விதிக்க வேண்டும் என மீனவ சங்கத் தலைவா் சகாயம் சனிக்கிழமை தெரிவித்தாா்.