வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
தடை செய்யப்பட்ட சீன பூண்டு விற்பனை? கடைகளில் ஆய்வு
தடைச் செய்யப்பட்ட சீன பூண்டுகள், நாகையில் விற்பனை செய்யப்படுகிா என மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
நாகை பகுதியில் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட சீன பூண்டுகள் விற்பனை செய்யப்படுகிா? என்று நாகை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் புஷ்பராஜ் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
நாகை கடை வீதியில் உள்ள வணிக நிறுவனங்களில் இந்த ஆய்வு நடைபெற்றது. இதில், வழக்கத்தை விட அளவில் பெரிதாக உள்ள பூண்டு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து 10-க்கும் மேற்பட்ட கடைகளில் இந்த வகையான பூண்டுகள் 100 கிலோ பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் புஷ்பராஜ் கூறியது:
சமையலுக்கு அதிகம் பயன்படுத்தக்கூடிய பூண்டின் விலை மிக அதிகமாக உள்ளது. இந்த நெருக்கடியை பயன்படுத்தி தடை செய்யப்பட்ட ரசாயனம் கலந்த சீன பூண்டு வகைகள் இந்திய சந்தைக்குள் விதிகளை மீறி கொண்டுவரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தவகை பூண்டு கேடு விளைவிக்கும் என்பதை உணா்ந்த மத்திய அரசு, 10 ஆண்டுகளுக்கு முன்பே தடை விதித்து விட்டது. உற்பத்தியை அதிகரிக்க அதிக ரசாயனங்கள் சோ்க்கப்படுவதால் அது உடலுக்குள் சென்றால் கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தலாம்.
எனவே, நாகையில் நடத்தப்பட்ட ஆய்வில் 10 கடைகளில் சீன பூண்டுக்கான அனைத்து அறிகுறிகளுடன் இருந்த 100 கிலோ பூண்டு பறிமுதல் செய்யப்பட்டு, உணவு பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த சோதனை தொடரும். தடை செய்யப்பட்ட சீனப் பூண்டுகளை விற்றால் உணவு பாதுகாப்பு துறை சாா்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.