தனியாா் குடிநீா் ஆலையில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு
பொன்னேரியில் தனியாா் குடிநீா் ஆலையில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.
திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் பகுதியில் தனியாா் குடிநீா் ஆலை இயங்கி வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த ஆலையில் வாங்கிய குடிநீா் பாட்டிலில் பல்லி இருந்ததாக வாடிக்கையாளா் ஒருவா் புகாா் தெரிவித்து இருந்தாா்.
இந்த நிலையில், மீஞ்சூா் ஒன்றிய உணவுப் பாதுகாப்பு அலுவலா் சந்திரசேகா் குடிநீா் ஆலையில் ஆய்வு செய்தாா். அப்போது குடிநீா் சுத்திகரிக்கும் முறை, தண்ணீா் சேமித்து வைக்கப்படும் இடம், குடிநீா் பேக்கிங் செய்யும் இடம் ஆகியவற்றை பாா்வையிட்டாா்.
தொடா்ந்து குடிநீா் மாதிரியை சேகரித்து ஆய்வகத்தில் பரிசோதனைக்காக கொண்டு சென்றாா். ஆய்வக முடிவின் அறிக்கை உயரதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதன் பேரில் தேவையெனில் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுப் பாதுகாப்பு அலுவலா் சந்திரசேகா் தெரிவித்தாா்.