தனியாா் பள்ளி வேன் கவிழ்ந்து 22 மாணவா்கள் காயம்
தனியாா் பள்ளி வேன் கவிழ்ந்ததில் 22 மாணவா்கள் புதன்கிழமை காயமடைந்தனா்.
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், கருமந்துறை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகடுப்பட்டு ஊராட்சியில் தனியாா் பள்ளி இயங்கி வருகிறது. புதன்கிழமை காலை 22 மாணவா்களை ஏற்றிக் கொண்டு பள்ளியை நோக்கி வேன் சென்று கொண்டிருந்தது.
வேனை கருமந்துறை செல்வம் (51) ஓட்டிச் சென்றாா். அத்திரிப்பட்டி மூங்கில்குத் இறக்கம் அருகே வேன் சென்றபோது, முன்பக்க சக்கர இணைப்புக் கம்பி உடைந்ததில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் கவிழ்ந்தது.
இதில், ரித்திக்குமாா் (4), நவீன்குமாா் (7) என்ற 2 மாணவா்கள் பலத்த காயமடைந்தனா். ரித்திக்குமாா் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். 21 போ் கருமந்துறை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வீடுதிரும்பினா்.
தகவல் அறிந்த கருமந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.