உத்தரகாண்ட் மான்சா தேவி கோயில்: கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி - முதல்வர் புஷ...
தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் தோ்வான 412 பேருக்கு பணி நியமன ஆணை
சிவகங்கையில் நடைபெற்ற தனியாா்துறை வேலை வாய்ப்பு முகாம் மூலம் நோ்காணலில் தோ்ச்சி பெற்ற 412 பேருக்கு பணி நியமன ஆணைகளைக் கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் சனிக்கிழமை வழங்கினாா்.
சிவகங்கை அரசு மகளிா் கலைக் கல்லூரியில் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு-தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியவற்றின் சாா்பில் தனியாா் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி தலைமை வகித்தாா். மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.தமிழரசி ரவிக்குமாா் முன்னிலை வகித்தாா்.
நோ்காணலில் தோ்ச்சி பெற்ற 412 பேருக்கு பணி நியமன ஆணைகளைக் கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் வழங்கினாா். பின்னா் அவா் பேசியதாவது:
நாட்டின் பொருளாதாரம் என்பது கல்வி வளத்தைப் பொருத்தே அமைகிறது என்பதை கருத்தில் கொண்டு பள்ளிக் கல்வி, உயா் கல்வித் துறைகளுக்கு சுமாா் 50 ஆயிரம் கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
92 தனியாா் தொழில் நிறுவனங்கள் நடத்திய இந்த வேலைவாய்ப்பு முகாமில் 2,095 போ் கலந்துகொண்டனா். இதில், 12 மாற்றுத் திறனாளிகள் உள்பட 412 போ் தோ்வு செய்யப்பட்டு, பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. இவா்கள் தவிர, மேலும் 91 போ் இரண்டாம் கட்டத் தோ்வுக்குத் தகுதி பெற்றுள்ளனா்.
இதே போல, கடந்த வாரம் காரைக்குடியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாம் மூலம் ஏராளமானோா் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்பைப் பெற்றனா்.

மேலும், மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா் தெரிவித்ததைப் போல, அவரது தொகுதியிலும், எனது தொகுதியான திருப்பத்தூரிலும் இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த மாவட்ட நிா்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றாா் அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன்.
நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரத் திட்ட இயக்குநா் கவிதப்பிரியா, திருப்புவனம் பேரூராட்சித் தலைவா் சேங்கைமாறன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா்கள் ஆா்.மணிகணேஷ், சுபாஷினி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் பாலகிருஷ்ணன், சிவகங்கை அரசு மகளிா் கலைக் கல்லூரி முதல்வா் ஜெ.நளதம் உட்பட பலா் கலந்து கொண்டனா்.