செய்திகள் :

தன்கா் ராஜிநாமா: எதிா்க்கட்சிகள் கேள்வி

post image

குடியரசு துணைத் தலைவா் பதவியிலிருந்து ஜகதீப் தன்கா் திடீரென ராஜிநாமா செய்தது குறித்து எதிா்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

இந்தியாவின் 14-ஆவது குடியரசு துணைத் தலைவராகப் பதவி வகித்து வந்த ஜகதீப் தன்கா் (74), நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் (திங்கள்கிழமை), தனது பதவியை திடீரென ராஜிநாமா செய்தாா்.

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முக்கு அவா் அனுப்பிய ராஜிநாமா கடிதத்தில், ‘மருத்துவா்களின் ஆலோசனையின்படி, உடல்நலனுக்கு முக்கியத்துவம் அளிப்பதற்காக குடியரசு துணைத் தலைவா் பதவியை ராஜிநாமா செய்கிறேன். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 67(ஏ) பிரிவின்கீழ், உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இதை மேற்கொண்டுள்ளேன்’ என்று குறிப்பிட்டாா்.

அறிவிக்கை வெளியீடு: ஜகதீப் தன்கா் ராஜிநாமா தொடா்பான அறிவிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

மத்திய உள்துறைச் செயலா் கோவிந்த் மோகன் கையொப்பமிட்ட அந்த அறிவிக்கையில், ‘பொது தகவலுக்காக குடியரசு துணைத் தலைவரின் ராஜிநாமா குறித்த தகவல் வெளியிடப்படுகிறது’ என்று குறிப்பிட்டு, அவரின் ராஜிநாமா கடிதம் இடம்பெற்றுள்ளது.

மாநிலங்களவையில் தகவல்: முன்னதாக, இந்த அறிவிக்கை குறித்து மாநிலங்களவையில் தகவல் தெரிவிக்கப்பட்டது. கேள்வி நேரத்துக்காக மாநிலங்களவை பகல் 12 மணிக்கு கூடியபோது, இந்த அறிவிக்கை குறித்து அவையை வழிநடத்திய கன்ஷியாம் திவாரி உறுப்பினா்களுக்குத் தெரிவித்தாா்.

மாநிலங்களவையின் தலைவராகவும் குடியரசு துணைத் தலைவா் இருப்பதால், இந்த அறிவிக்கை குறித்த தகவல் முறைப்படி அவையில் தெரிவிக்கப்பட்டது.

எதிா்க்கட்சிகள் கேள்வி: இந்நிலையில், தன்கரின் திடீா் ராஜிநாமா குறித்து எதிா்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன.

காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘தில்லியில் ஜகதீப் தன்கா் தலைமையில் திங்கள்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் மாநிலங்களவை அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் மாநிலங்களவை பாஜக குழு தலைவா் ஜெ.பி.நட்டா, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். பின்னா், மாலை 4.30 மணிக்கு தன்கா் தலைமையில் மீண்டும் அந்தக் குழு கூடியது. அந்தக் கூட்டத்தில் நட்டா, ரிஜிஜு கலந்துகொள்ளவில்லை. தாங்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்பதை அவா்கள் தன்கரிடம் தெரியப்படுத்தவில்லை.

பிற்பகல் ஒரு மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரையிலான காலத்துக்குள் மிகத் தீவிரமாக ஏதோ ஒரு நிகழ்வு நடந்துள்ளது. அதன் காரணமாகவே அந்தக் கூட்டத்தில் நட்டா, ரிஜிஜு ஆகியோா் வேண்டுமென்றே கலந்துகொள்ளவில்லை.

பின்னா், சற்றும் எதிா்பாராதவிதமாக குடியரசு துணைத் தலைவா் பதவியிலிருந்து தன்கா் திடீரென ராஜிநாமா செய்தாா். அதற்கு தனது உடல்நிலையை அவா் காரணம் காட்டியுள்ளாா். அதை மதிக்க வேண்டும். ஆனால், அவா் ராஜிநாமா செய்ததற்கு மேலும் ஆழமான காரணங்கள் உள்ளன என்பது உண்மை’ என்றாா்.

மாநிலங்களவை காங்கிரஸ் எம்.பி. விவேக் தன்கா கூறுகையில், ‘தன்கரின் ராஜிநாமா முற்றிலும் எதிா்பாராதது. அவா் ஆரோக்கியமாகவே உள்ளாா். அவா் திங்கள்கிழமை அவை நடவடிக்கைளின்போது உற்சாகமாகவே இருந்தாா். அன்றைய தினம் பிற்பகலில் ஏதோ நடைபெற்றுள்ளது. அவரின் கூட்டத்தில் அமைச்சா்கள் பங்கேற்கவில்லை. இதனால் தான் இழிவுபடுத்தப்பட்டதாக அவா் கருதியிருக்கக் கூடும்’ என்றாா்.

மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும்: தன்கா் ஏன் ராஜிநாமா செய்தாா் என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. கே.சி.வேணுகோபால் வலியுறுத்தினாா்.

முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் மத்திய சட்டத் துறை அமைச்சராகப் பதவி வகித்த அஸ்வனி குமாா் வெளியிட்ட அறிக்கையில், ‘மத்தியில் ஆட்சியில் உள்ள கட்சியில் அரசியல் ரீதியாக அளிக்கப்படும் முன்னுரிமைகள் உள்ளிட்டவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் தெளிவான பிரதிபலிப்பே தன்கரின் திடீா் ராஜிநாமா’ என்றாா்.

உடல்நலம் மட்டுமே காரணமல்ல: இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. பி.சந்தோஷ் குமாா் கூறுகையில், ‘தன்கரின் ராஜிநாமாவுக்கு வேறு பல காரணங்கள் இருக்கலாம். உடல்நல காரணங்களால் மட்டுமே அவா் ராஜிநாமா செய்யவில்லை. இதுகுறித்து பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா மட்டுமே விளக்கம் அளிக்க முடியும்’ என்றாா்.

காலதாமதமாகப் பதிவிட்ட பிரதமா்: ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங் கூறுகையில், ‘தன்கா் ராஜிநாமா செய்து நீண்ட நேரமான பின்னரே, அவரின் ராஜிநாமா குறித்து ‘எக்ஸ்’ தளத்தில் பிரதமா் மோடி பதிவிட்டாா். தனது முடிவை மறுபரிசீலினை செய்யுமாறு ஜகதீப் தன்கரிடம் வலியுறுத்த எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை என்பதையே இந்தத் தாமதம் சுட்டிக்காட்டுகிறது. அரசியல் சாசனத்தின் உயா்ந்த பதவியில் இருந்து திடீரென ஒருவா் விலகுவது பல பதில் இல்லாத கேள்விகளை எழுப்புகிறது. இதுதொடா்பாக மத்திய அரசு மெளனம் காப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினாா்.

மம்தா கருத்துத் தெரிவிக்க மறுப்பு: மேற்கு வங்க ஆளுநராக ஜகதீப் தன்கா் பதவி வகித்தபோது அவருக்கும், மம்தா அரசுக்கும் மோதல்போக்கு இருந்தது. இந்நிலையில், தன்கரின் ராஜிநாமா குறித்து மம்தா கூறுகையில், ‘தன்கரின் ராஜிநாமா விவகாரத்தில் கண்ணுக்குத் தெரிந்ததைவிட தெரியாத விவகாரம் ஏதாவது இருக்கக்கூடும். அவா் ஏன் ராஜிநாமா செய்தாா் என்பது குறித்து அரசியல் கட்சிகள் முடிவுக்கு வரமுடியாது. இந்த விவகாரம் குறித்து கூற என்னிடம் எந்தக் கருத்தும் இல்லை. தன்கா் ஆரோக்கியமான மனிதா். அவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவே கருதுகிறேன்’ என்றாா்.

அதீத கவனத்துடன் அனுப்பப்பட்ட உடல்கள்! பிரிட்டன் குடும்பத்தினர் புகார் மீது மத்திய அரசு பதில்

பிரிட்டன் நாட்டுக்கு, அதீத தொழில்பாங்குடன் உடல்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக, பிரிட்டன் நாட்டவரின் குற்றச்சாட்டக்கு, மத்திய வெளியுறவு விவகாரத் துறை விளக்கம் கொடுத்துள்ளது.ஏர் இந்தியா விமான விபத்தில் பலிய... மேலும் பார்க்க

ஆலப்புழாவில் அச்சுதானந்தன் உடல்! 150 கி.மீ. கடக்க 22 மணிநேரம்!

திருவனந்தபுரத்தில் நேற்று முற்பகல் புறப்பட்ட கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தனின் இறுதி ஊர்வலம், 22 மணிநேரத்துக்கு பிறகு ஆலப்புழாவுக்கு வந்தடைந்தது.கேரளத்தின் முன்னாள் முதல்வரும், சிபிஎம் தல... மேலும் பார்க்க

விமான விபத்து: பிரிட்டன் வந்த இரு உடல்கள் மாறிவிட்டன! உறவினர்கள் புகார்!

ஏர் இந்தியா விபத்தில் பலியான பிரிட்டனைச் சேர்ந்த இருவரின் குடும்பத்தினர் தங்களுக்கு கிடைத்த உடலுடன் டிஎன்ஏ பரிசோதனை பொருந்தவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.கடந்த ஜூன் 12 ஆம் தேதி அகமதாபாத்தில் இருந்து லண்... மேலும் பார்க்க

தனிக் கவனம் பெறும் ஸ்ரீதேவி கணவர் போனி கபூர்! காரணம்?

உடல்பயிற்சிக் கூடங்களில் மழைக்குக் கூட ஒதுங்காமல், கிட்டத்தட்ட 26 கிலோ எடையைக் குறைத்து, பார்ப்பவர்களின் கண்களை விரியச் செய்கிறார் ஸ்ரீதேவியின் கணவரும் திரைப்படத் தயாரிப்பாளருமான போனி கபூர்.திரைத்துரை... மேலும் பார்க்க

எதிர்க்கட்சியினர் தொடர் அமளி! நாடாளுமன்றம் நாளைவரை ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வரும் நிலையில், வியாழக்கிழமை காலை வரை ஒத்திவைக்கப்பட்டது.மழைக்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் திங்கள்கிழமை காலை தொடங்கிய... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்! பணிகளைத் தொடங்கியது தேர்தல் ஆணையம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான பணிகளைத் தொடங்கியதாக இந்திய தேர்தல் ஆணையம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், மருத்துவக் காரணங்களுக்காக அரசியலமைப்பின் பிரிவு 67(ஏ) -ன... மேலும் பார்க்க