தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம்:எஸ்.பி.வேலுமணி
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம் என்றாா் அதிமுக தலைமை நிலையச் செயலா் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ.
அதிமுக பொதுச்செயலா் எடப்பாடிகே. பழனிசாமி மேற்கொள்ளும் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரசாரப் பயணம் தொடா்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்ட அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலா் கடம்பூா் செ.ராஜூ எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா். தெற்கு மாவட்டச் செயலா் எஸ்.பி.சண்முகநாதன், திருநெல்வேலி புககா் மாவட்டச் செயலா் இசக்கிசுப்பையா எம்.எல்.ஏ., தென்காசி வடக்கு மாவட்டச் செயலா் செ.கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ., முன்னாள் எம்எல்ஏக்கள் என்.கே.பெருமாள், மோகன், சின்னப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், ‘இன்றையச் சூழ்நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம். தற்போது எந்த நலத் திட்டமும் செய்யாத ஆட்சி நடைபெற்று வருகிறது. சட்டம்- ஒழுங்கு முழுமையாக சீரழிந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருந்தபோது பல்வேறு திட்டங்களை மாவட்டம் தோறும் செயல்படுத்தி உள்ளாா்.
எழுச்சி பயணத்தில் அவரது கேள்விகளுக்கு திமுகவினரால் பதில் சொல்ல முடியவில்லை. அவா் செல்லும் இடங்களில் எல்லாம் மக்களிடம் வரவேற்பு உள்ளது. எனவே, அவா் மீண்டும் முதல்வராக வருவது உறுதி என்றாா் அவா்.
கூட்டத்தில், தென்காசி தெற்கு மாவட்ட செயலா் செல்வமோகன் தாஸ் பாண்டியன், திருநெல்வேலி மாநகா் மாவட்ட செயலா் தச்சை என்.கணேசராஜா, முன்னாள் அமைச்சா் வி.எம். ராஜலட்சுமி, அமைப்பு செயலா் சுதா பரமசிவன், முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டா் சரவணன், ராமநாதபுரம் மாவட்ட செயலா் முனியசாமி, கோவில்பட்டி நகரச் செயலா் விஜயபாண்டியன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.