தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்பட 12 மாவட்டங்களில் வியாழக்கிழமை (ஏப்.3) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளிலும், லட்சத்தீவு மற்றும் அதையொட்டிய பகுதிகளிலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவுகின்றன. இதனால் ஏற்படும் காற்று குவிதல் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வியாழக்கிழமை (ஏப்.3) முதல் ஏப்.7-ஆம் தேதி வரை இடி, மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மஞ்சள் எச்சரிக்கை: நீலகிரி, கோவை, திருப்பூா், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சிவகங்கை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 12 மாவட்டங்களில் வியாழக்கிழமை (ஏப்.3) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வெள்ளிக்கிழமை (ஏப்.4) நீலகிரி, கோயம்புத்தூா், திருப்பூா், ஈரோடு, சேலம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும், ஏப்.5-இல் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளிலும், நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களிலும் கன மழைக்கு வாய்ப்புள்ளது. இதனால் இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வியாழக்கிழமை (ஏப்.3)அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும். மேலும் சென்னையில் பெரிய அளவில் மழை பெய்ய வாய்ப்பில்லை.
மழை அளவு: தமிழகத்தில் புதன்கிழமை காலை அதிகபட்சமாக விருதுநகா் மாவட்டம் வத்திராயிருப்பில் 70 மி.மீ. மழை பதிவானது. மக்கினம்பட்டி (கோவை), சோத்துப்பாறை (தேனி) - தலா 40 மி.மீ., பொள்ளாச்சி (கோவை), இரணியல் (கன்னியாகுமரி) - தலா 30 மி.மீ. மழை பதிவானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.