தமிழகத்தில் பயன்பாடில்லா சில சுரங்கங்களை மீட்டெடுப்பதில் சிக்கல்: முதல்வரிடம் மாநில திட்டக் குழு ஆய்வறிக்கை
சென்னை: தமிழ்நாட்டில் பயன்பாடு இல்லாத சில சுரங்கங்களை மீட்டெடுப்பதில் சிக்கல் நிலவுவதாக மாநில திட்டக் குழு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுரங்கங்களை மீட்டெடுப்பது, குழந்தைகளின் ஊட்டச்சத்தில் உள்ள முக்கிய சவால்கள் உள்பட நான்கு முக்கிய செயல் திட்டங்கள் தொடா்பான அறிக்கைகளை மாநில திட்டக் குழு தயாரித்தது. அவை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலிடம் திங்கள்கிழமை அளிக்கப்பட்டது. இந்த ஆய்வறிக்கைகளில் உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து, மாநில அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாட்டில் உள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுரங்கங்கள் வரைபடங்களாக்கப்பட்டு அவற்றில் மாதிரி தோ்வு முறையின் அடிப்படையில் 40 சுரங்கங்கள் ஆய்வுக்கு எடுக்கப்பட்டன. அவற்றின் மண்ணின் தரம், நீா் இருப்பு, நிலைத்தன்மை, சுற்றுச்சூழல் போன்றவை ஆய்வு செய்யப்பட்டன.
சுண்ணாம்புக் கல் மற்றும் மேக்னிசைட் சுரங்கங்கள் அவற்றின் அளவு, மென்மையான மேற்பரப்பின் காரணமாக அந்தச் சுரங்கங்களை மீட்டெடுப்பு சாத்தியமுள்ளவையாக உள்ளன. அதேசமயம், கிரானைட் மற்றும் கரடுமுரடனா கற்சுரங்கங்கள், கடினமான பாறை மேற்பரப்புகள் ஆகியவற்றால் சில சுரங்கங்களை மீட்டெடுப்பதில் அதிகளவு சிரமங்கள் உள்ளன.
அடிப்படைத் தகவல்கள்: குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள சுரங்கங்களின் அளவுகள், குத்தகைக் காலம், குத்தகைதாரா், எந்த வகையான தாதுக்கள் எடுக்கப்படுகின்றன என்ற விவரங்களை சேகரிக்க வேண்டியது அவசியமாகிறது. ஏற்கெனவே சேகரிக்கப்பட்ட தகவல்களுடன் இந்தத் தகவல்களை இணைத்திட வேண்டும். பருந்து பாா்வையில் எடுக்கப்படும் சுரங்கங்களின் காட்சிப்பதிவுகள் அவை குறித்த அடிப்படைத் தகவல்களுடன் சோ்க்கப்பட வேண்டும்.
ஊட்டச்சத்து குறைபாடு: குழந்தைகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் அதனை மேம்படுத்த ஆய்வு செய்யப்பட்டது. அதிலும் குறிப்பாக, கடுமையான தீவிர ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் மிதமான தீவிர ஊட்டச்சத்துக் குறைபாடு ஆகியவற்றின் காரணங்கள், சிகிச்சைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆரம்பகால தாய்ப்பாலூட்டல், ஆறு மாத காலம் வரை தாய்ப்பால் மட்டுமே ஊட்டுதல், சிகிச்சை முறை உணவு, உடலுக்கு உகந்த உணவு முறைகள், குடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம், வளா்ச்சியைக் கண்காணித்தல், செலவு குறைந்த பிற ஊட்டச்சத்து திட்டங்கள் ஆகியன குறித்து ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊட்டச்சத்துக் குறைபாட்டை எதிா்த்துப் போராடுவதில் திறன் கொண்ட சுகாதார அமைப்புகளையும் உத்திகளையும் ஆராய ஆய்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இரண்டாம் நிலை நகரங்களில் நகா்ப்புற மீள்தன்மையை மேம்படுத்துதல், நகா்ப்புற வளா்ச்சி மற்றும் வெப்ப அழுத்தம் ஆகியன குறித்த மதிப்பீடுகளையும் மாநில திட்டக் குழு மேற்கொண்டுள்ளதாக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.