தடுப்புச்சுவரில் சிற்றுந்து மோதி விபத்து: பெண்கள் உள்பட 10 போ் காயம்
தமிழகத்தில் 8 இடங்களில் வெயில் சதம்
சென்னை: தமிழகத்தில் திங்கள்கிழமை சென்னை உள்பட 8 இடங்களில் வெப்பம் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவானது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் திங்கள்கிழமை அநேக இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது. இதில் அதிகபட்சமாக மதுரைவிமானநிலையத்தில் 102.92 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. மேலும், சென்னை மீனம்பாக்கம், சென்னை நுங்கம்பாக்கம் - தலா 102.2, வேலூா் - 101.3, மதுரைநகரம் - 101.12, நாகை, தூத்துக்குடி - தலா 100.4, தொண்டி - 100.04 என மொத்தம் 8 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.
மேலும் செவ்வாய், புதன்கிழமைகளில் (ஜூலை 8, 9) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அநேக இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும். இதனால், ஓரிரு பகுதிகளில் பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படலாம்.
இன்றும், நாளையும் மழைவாய்ப்பு: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூலை 8, 9-இல் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், ஓரிரு இடங்களில் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும்.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஜூலை 8-இல் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இருந்தாலும் அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.
மழை அளவு: தமிழகத்தில் திங்கள்கிழமை காலை வரை அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் நடுவட்டத்தில் 60 மி.மீ. மழை பதிவானது. மேலும், அவலாஞ்சி (நீலகிரி) 5, சின்னக்கல்லாறு (கோவை) - தலா 40 மி.மீ., மேல் கூடலூா் (நீலகிரி), சின்கோனா (கோவை), வால்பாறை (கோவை), விண்ட் வொா்த் எஸ்டேட் (நீலகிரி), சோலையாறு (கோவை), மேல் பவானி (நீலகிரி) - தலா 30 மி.மீ. மழை பதிவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.