"தமிழ்நாட்டிற்கு இதைக் கொண்டு வராமல், புதிய விமான நிலையங்கள் திறந்து என்ன பயன்?" - டி.ஆர்.பி. ராஜா
தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடுவிற்குக் கடிதம் எழுதியுள்ளார். அதை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில்...
"மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரச்னையில் தலையிட்டு, தமிழ்நாட்டிற்கு விமானப் போக்குவரத்தில் மேற்கொள்ளப்படும் அநீதியைக் கலைய வேண்டும்.

இதற்குப் பதில்...
சென்னை - திருச்சி, சென்னை - தூத்துக்குடி வழியே செல்லும் ஒவ்வொரு இண்டிகோ விமானமும் நிரம்பித்தான் செல்கின்றன. ஆனாலும், மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் இந்தப் பாதையில் வழக்கமாகச் செல்லும் ATR விமானங்களுக்குப் பதிலாக, '320' விமானத்தை மாற்ற மறுக்கிறது.
இந்த விமானங்கள் மூன்று அடுக்கு இணைப்புப் பாதைகளுக்கு வேண்டுமானாலும் சரியாக இருக்கலாம். ஆனால், இந்தியாவின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்காற்றும் ஒரு மாநிலத்திற்குச் சரிப்பட்டு வராது.
ஏ.சி அதிகம் இல்லாத இந்த விமானங்களில் பயணிக்கும் பிசினஸ் பயணிகள் F11 ரேசர்கள் போல, வெப்பம் மற்றும் வியர்வை மிகுந்த பயணத்தில் ஒரு கிலோ அல்லது இரண்டு கிலோ குறைகிறார்கள்.
என்ன பயன்?
தமிழ்நாட்டிற்குள் இருக்கும் மாவட்டங்களை இணைக்கும் விமானங்கள் சிறிய ATR விமானங்களாக இருப்பது குறித்தும், பெரிய 320 விமானங்களாக இல்லாதது குறித்தும் பல தொழிலதிபர்கள் புகார் அளித்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டிற்குப் பெரிய விமானங்களை அறிமுகப்படுத்தாமல், புதிய, நவீன விமான நிலையங்களை அறிமுகப்படுத்துவதில் என்ன பயன்?
ஒன்றிய அரசும், இண்டிகோ நிறுவனமும் அதிக கட்டணங்களை வசூலிக்கும்போது, பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதியைக் கருத்தில் கொள்ளாமல் புறக்கணிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

தவிர்க்கின்றனர்!
ATR விமானங்களில் டர்புலன்ஸ் மற்றும் கடினமான லேண்டிங் அடிக்கடி நடக்கும் என்பது நன்கு தெரிந்ததுதான். அதனால், அடிக்கடி பயணம் செய்பவர்கள் இந்த விமானங்களைத் தவிர்க்கின்றனர்.
இது குறித்துப் பல முதலீட்டாளர்கள் என்னிடம் புகார் தெரிவிக்கிறார்கள். நானும் இது குறித்துப் பல முறை ஒன்றிய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளேன். அமைச்சரிடமும் தெரிவித்துள்ளேன். எங்களது எம்.பிக்களும் தனிப்பட்ட முறையில் இதைத் தெரிவித்திருக்கிறார்கள்.
இருந்தும், ஒரு பிசியான பாதையில் இண்டிகோ இன்னும் சின்ன விமானத்தை இயக்கிக் கொண்டிருப்பது ஏன்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.