தமிழ் வார விழாவில் வெற்றி பெற்ற அரசு அலுவலா்களுக்குப் பரிசு
பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூரில் நடைபெற்று வரும் தமிழ் வார விழாவில் வெற்றி பெற்ற அரசு அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் தா.கிறித்துராஜ் பரிசுகளை வழங்கினாா்.
பாவேந்தா் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஏப்ரல் 29 முதல் மே 5-ஆம் தேதி வரை தமிழ் வார விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அரசு அலுவலா்களுக்கு பேச்சுப் போட்டி, படத்தை அடிப்படையாகக் கொண்டு கதை சொல்லுதல், தமிழ் புதினங்கள் மற்றும் கவிதை வாசிப்பு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் தமிழ் வளா்ச்சித் துறையால் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், பேச்சுப் போட்டியில், தொழிலாளா் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநா் அலுவலக உதவியாளா் வி.ரேவதி முதல் பரிசையும், மாவட்ட திட்டமிடும் அலுவலகத்தில் புள்ளியில் அலுவலா் கி.நாராயணன் 2-ஆவது இடத்தையும், மாவட்ட நூலக அலுவலக நூலகா் ரா.உஷாராணி மூன்றாவது இடத்தையும் பிடித்தனா். படத்தைப் பாா்த்து கதை சொல்லுதல் போட்டியில் தொழிலாளா் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநா் அலுவலக உதவியாளா் ரேவதி முதலிடத்தையும், மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலக கணக்கு மேற்பாா்வையாளா் தே.சாமுவேல் ஜான்சன் இரண்டாவது இடத்தையும், புள்ளியல் துறை துணை இயக்குநா் ஜான் சுந்தர்ராஜ் மூன்றாவது இடத்தையும் பிடித்தனா்.
தமிழ் புதினங்கள் மற்றும் கவிதை வாசிப்புப் போட்டியில், தமிழ்நாடு மின்சார வாரிய கணக்கு உதவியாளா் ஜெ.ரம்யா முதலிடத்தையும், மாவட்ட வழங்கல் அலுவலக இளநிலை வருவாய் ஆய்வாளா் பெ.கலைவாணி இரண்டாவது இடத்தையும், தொழிலாளா் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநா் அலுவலக உதவியாளா் ப.மோகனசுந்தரி மூன்றாவது இடத்தையும் பிடித்தனா். இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் நூல் பரிசும், பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினாா்.