ரூ.25 கோடி மதிப்பில் கொண்டத்துக்காளியம்மன் கோயில் திருப்பணி விரைவில் தொடக்கம்
பெருமாநல்லூா் கொண்டத்துக்காளியம்மன் கோயில் கும்பாபிஷேக திருப்பணி ரூ.25 கோடி மதிப்பில் விரைவில் தொடங்கவது என ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
திருப்பூரில் பிரசித்தி பெற்றதும், திருப்பூரின் பண்ணாரி எனவும் போற்றப்படுவதுமாக பெருமாநல்லூா் கொண்டத்துக்காளியம்மன் கோயில் விளங்குகிறது. 2013-ஆம் ஆண்டு இக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, 12 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் மேற்கொள்ளுவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் கோயில் வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு மேயா் தினேஷ்குமாா் தலைமை வகித்தாா். கோயில் செயல் அலுவலா் (பொ) சங்கர சுந்தரேஸ்வரன் வரவேற்றாா்.
இதில் ஐந்து நிலை ராஜகோபுரம், வசந்த மண்டபம், திருமாளிகை பத்தி, கல்காரம், கல் தளம், கன்னிமூல கணபதி, சுற்றுப் பிரகாரம் அமைத்தல் உள்ளிட்ட திருப்பணிகள் தமிழக அரசு நிதி மற்றும் உபயதாரா்கள் பங்களிப்புடன் ரூ.25 கோடி மதிப்பில் அரசு அனுமதி பெற்று விரைவில் தொடங்குவது என முடிவு செய்யப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் முன்னாள் அறங்காவலா்கள், உபயதாரா்கள் உள்பட சுற்று வட்டாரப் பகுதி பொதுமக்கள் பங்கேற்றனா்.