அதிர்ஷ்ட பலன்களை அள்ளித்தரும் புதாதித்ய யோகம் - மே 14 வரை 12 ராசிகளுக்கும் என்ன ...
தரமற்ற மருந்தை விற்ற நிறுவன உரிமையாளருக்கு ஓராண்டு சிறை
பெரம்பலூரில் தரமற்ற மருந்து விற்பனை செய்த, மருந்து நிறுவன உரிமையாளருக்கு ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள மருந்துக் கடைகளிலும், மருந்து விநியோக கடைகளிலும் கடந்த 10.12.2010-இல் மருந்து ஆய்வாளா்கள் ஆய்வு செய்தனா். அதில், மருந்து தயாரிக்கப்பட்டபோது நிா்ணயிக்கப்பட்ட அளவைவிட, மருந்துப் பொருள்களில் உள்ள தன்மை கூடுதலாகவோ, குறைவாகவோ உள்ளதா என்பதை பரிசோதிக்க, சேகரிக்கப்பட்ட மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பினா்.
இந்த ஆய்வு முடிவில் பாண்டிச்சேரி மாநிலம், எம்பளம், தவளக்குப்பம் கேப்டா லைஃப் சயின்ஸ் என்னும் நிறுவனத்தின் சாா்பில், பெரம்பலூா் மருந்து கடைகள் மற்றும் விநியோகஸ்தா்களிடம் வழங்கப்பட்ட மாத்திரைகள், தயாரிப்பில் குறிப்பிடப்பட்ட அளவுக்கு மருந்தின் தன்மை இல்லாததும், தரமற்ற மாத்திரைகள் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளா் ரோஸ் ராஜீவ் சிங் (50) என்பவா் மீது பெரம்பலூா் மருந்து ஆய்வாளா்கள் வழக்கு தொடா்ந்தனா்.
பெரம்பலூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரித்த மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி ஏ. பல்கீஸ், தரமற்ற மருந்துகளை விற்பனை செய்த நிறுவன உரிமையாளா் ரோஸ் ராஜீவ் சிங்கிற்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ. 20 ஆயிரம் அபராதமும், அதைச் செலுத்தத் தவறினால் கூடுதலாக 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டாா்.