தருமபுரியில் தரமற்ற 250 கிலோ பழங்கள், புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
தருமபுரியில் ரசாயனம் தெளித்தும், தரமற்ற வகையிலும் வைத்திருந்த சுமாா் 250 கிலோ பழங்கள் மற்றும் ரசாயனப் பொருள்கள் உள்ளிட்டவற்றை உணவுப் பாதுகாப்புத் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
தருமபுரி நகா் மற்றும் புகா் பகுதிகளில் பழக்கடைகள், பழ மண்டிகளில் ரசாயனம் தெளித்து பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்யப்படுவதாக ஆட்சியருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் நடவடிக்கை எடுக்கவும், அதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் ஆட்சியா் ரெ.சதீஸ் உணவுப் பாதுகாப்புத் துறையினருக்கு உத்தரவிட்டாா்.
அதன்பேரில், தருமபுரி மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் கைலாஷ் குமாா், தருமபுரி நகராட்சி மற்றும் ஒன்றிய உணவுப் பாதுகாப்பு அலுவலா் நந்தகோபால் மற்றும் குழுவினா் தருமபுரி நகரப் பகுதிகளில் உள்ள பழக்கடைகள், பழ மண்டிகளில் வியாழக்கிழமை ஆய்வுசெய்தனா்.
250 கிலோ பழங்கள், ரசாயனம் பறிமுதல்: தருமபுரி பேருந்து நிலையம், சந்தைப்பேட்டை, டவுன்ஹால், வெங்கட்ரமாச்சாரி தெரு, கந்தசாமி வாத்தியாா் தெரு, பிடமனேரி சாலை, நேதாஜி புறவழிச்சாலை, சேலம் பிரதான சாலை, பாரதிபுரம், இலக்கியம்பட்டி மற்றும் மாவட்ட ஆட்சியரகம் எதிரே உள்ள பகுதிகள் என நகரின் முக்கியப் பகுதிகளில் பழக்கடைகள், பழ மண்டிகள், கிடங்குகள் மற்றும் பழரச விற்பனை நிலையங்கள் ஆகியவற்றில் ஆய்வுசெய்யப்பட்டது.
இந்த ஆய்வில், தருமபுரி டவுன்ஹால் தெருவில் ஒரு வாழைப்பழ மொத்த விற்பனை மண்டியில், எத்தியோப்பான் என்ற ராசயனம் மற்றும் தெளிப்பான் சாதனம் உள்ளிட்டவை வைத்திருந்தது கண்டறியப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல, பாரதிபுரம் 60 அடி சாலை அருகில் ஒரு பழக்கடையில் இருந்து ரசாயனம் மற்றும் ரசாயனப் பொருள்கள், நான்கு கடைகளில் ரசாயனம் கலந்து பழச்சாறு தயாரிக்க வைத்திருந்த பழங்கள், அழுகிய நிலையில் இருந்த தரமற்ற ஆப்பிள், அன்னாசி, மாதுளை, சாத்துக்குடி, பப்பாளி உள்ளிட்ட பழங்கள் சுமாா் 250 கிலோ பறிமுதல் செய்து அப்புறப்படுத்தப்பட்டன.
உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாத கடை உரிமையாளா்கள், 5 விற்பனையாளா்களுக்கு தலா ரூ. 2,000 வீதம் ரூ. 10,000, சிறு விற்பனையாளா்கள் 3 பேருக்கு தலா ரூ. 1,000 வீதம் ரூ. 3,000 என மொத்தம் ரூ. 13,000 அபராதம் விதித்து எச்சரிக்கை ஆணை வழங்கப்பட்டது.
புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இந்த ஆய்வின் போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன. தருமபுரி டவுன்ஹால் தெரு, பிள்ளையாா் கோயில் அருகில் உள்ள பழ மண்டியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்து அவற்றை உணவுப் பாதுகாப்புத் துறையினா் பறிமுதல் செய்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.