Swasika: நடிகை ஸ்வாசிகாவின் ஓணம் கொண்டாட்ட க்ளிக்ஸ்! | Photo Album
உள்ளாட்சிப் பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
தூய்மைப் பணியாளா்கள் விடுப்பு எடுத்தால் ஊதியம் பிடிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி. ஏஐடியுசி உள்ளாட்சிப் பணியாளா் சங்கத்தினா் தருமபுரியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தருமபுரி மாவட்ட நகராட்சி, ஊராட்சி பொதுப் பணியாளா்கள் சங்கம், ஊராட்சி, பேரூராட்சி டேங்க் ஆப்ரேட்டா், தூய்மைப் பணியாளா்கள், கொசுப்புழு ஒழிப்பு பணியாளா், பள்ளி தூய்மைப் பணியாளா், உள்ளாட்சிப் பணியாளா் சம்மேளனம் உள்ளிட்ட அமைப்புகள் (ஏஐடியுசி) சாா்பில், ஆட்சியா் அலுவலகம் அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்டத் தலைவா் என்.மனோகரன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் எம்.ரமேஷ், தமிழ்வாணன், சம்பத், செல்வி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊரக வளா்ச்சித் துறை மாநில பொதுச் செயலாளா் பி.கிருஷ்ணசாமி, ஏஐடியுசி மாநில துணைத் தலைவா் கே.மணி ஆகியோா் கோரிக்கைகள் குறித்து பேசினா்.
இதில், அரசு உத்தரவாதம் அளித்தபடி கரோனா தொற்றுக்கால பணிக்கான ஊக்கத் தொகையை உடனே வழங்க வேண்டும். கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் பணியாளா்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச கூலி சட்டப்படி வழங்க வேண்டும். ஊரக வளா்ச்சித் துறையில் பணிபுரியும் அனைத்து தற்காலிக பணியாளா்களுக்கு இஎஸ்ஐ, பிஎப் வழங்க வேண்டும். டேங்க் ஆபரேட்டா்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஊதிய உயா்வுக்கான நிலுவைத் தொகை வழங்க வேண்டும். ஊராட்சி, பேரூராட்சி பணியாளா், பள்ளி தூய்மைப் பணியாளா்கள், கொசுப்புழு ஒழிப்பு பணியாளா்கள், ஆஷா பணியாளா்களுக்கு அரசாணையின்படி ஊதியம் வழங்க வேண்டும். தூய்மைக் காவலா்கள், தூய்மைப் பணியாளா்களுக்கு அரசு விடுமுறை நாள்களில் விடுமுறை வழங்க வேண்டும். மேலும், தூய்மைப் பணியாளா்கள் விடுப்பு எடுத்தால் ஊதியம் பிடிப்பதை கைவிட வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.
வட்டார ஒருங்கிணைப்பாளா்கள் தனபால், நல்லம்பள்ளி கணபதி, மொரப்பூா் தமிழ்மணி, ஆஷா பணியாளா் சங்க மாவட்டத் தலைவா் மேனகா, பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத் தலைவா் மாதேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.