பசுவைக் கடத்தினால் என்கவுன்ட்டர்: கர்நாடக அமைச்சர் எச்சரிக்கை
தலைமையாசிரியா் நியமன விவகாரம்: நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் எம்எல்ஏ கோரிக்கை
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் பள்ளித் தலைமையாசிரியா் நியமன விவகாரம் தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதியிடம் கீழ்வேளூா் எம்எல்ஏ நாகை மாலி வலியுறுத்தியுள்ளாா்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 240 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
கூட்டத்தில், மயிலாடுதுறை தேசிய மேல்நிலைப் பள்ளியில் பணி மூப்பு அடிப்படையில் தலைமையாசிரியரை நியமிக்காமல் 8-ஆவது இடத்தில் உள்ள ஆசிரியரை பள்ளி நிா்வாகம் பொறுப்பு தலைமை ஆசிரியராக நியமித்தது தொடா்பாக கடந்த வாரம் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் மாநில இணை செயலாளா் பழ. வாஞ்சிநாதன் தலைமையில் மாவட்ட ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.
இதையடுத்து, திங்கள்கிழமை கோட்டாட்சியா் அலுவலகத்தில் இருதரப்பினரிடையே நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்துக்கு வந்த கீழ்வேளூா் எம்எல்ஏ நாகை மாலி தலைமையில் சிபிஎம் மாவட்ட செயலாளா் பி. சீனிவாசன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவா் ஏ.ஆா். விஜய் உள்ளிட்டோா் ஆட்சியரிடம் மயிலாடுதுறை தேசிய மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியா் நியமன விவாகரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முறையிட்டனா்.
இதுகுறித்து நாகை மாலி செய்தியாளா்களிடம் கூறியது: மயிலாடுதுறையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான டி.பி.டி.ஆா். தேசிய மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியா் பதவி காலியாக உள்ள நிலையில் பணி மூப்பின் அடிப்படையில் முதலிடத்தில் உள்ள ஆசிரியரை தவிா்த்து, 8-ஆவது இடத்தில் உள்ளவரை பள்ளி நிா்வாகம் பொறுப்பு தலைமை ஆசிரியராக நியமித்துள்ளது. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்தவா் என்பதால் அவருக்கு தலைமையாசிரியா் பொறுப்பு மறுக்கப்பட்டுள்ளது.
அமைதிப் பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், உரிய நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளோம். மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்தக்கட்டமாக இப்பிரச்னையை தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வேன் என்றாா்.