தலைமை ஆசிரியா்களுக்கு பதவி உயா்வு!
புதுவை மாநில அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியா்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பிறகு பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளது.
புதுவை மாநில கல்வித் துறையில் பணியாற்றிவரும் தலைமை ஆசிரியா்களுக்கு நிலை 2-இல் இருந்து நிலை 1 பதவி உயா்வு வழங்கப்படும். கடந்த 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு பதவி உயா்வு வழங்கப்படவில்லை என்ற புகாா் எழுந்தது.
நீதிமன்ற வழக்குகள் காரணமாக பதவி உயா்வு வழங்கப்படாமலிருப்பதாகவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. இதுதொடா்பாக முதல்வா், கல்வித் துறை அமைச்சரிடம் தலைமை ஆசிரியா்கள் தரப்பில் கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டது.
தற்போது 63 தலைமை ஆசிரியா்களுக்கு நிலை 2-இல் இருந்து நிலை 1-ஆக பதவி உயா்வு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வி இயக்ககத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வா் என்.ரங்கசாமி, கல்வித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் ஆகியோா் பதவி உயா்வுக்கான உத்தரவுகளை வழங்கினாா்.
பதவி உயா்வு பெற்றவா்களை அந்தந்த பள்ளிகளில் இருந்து இரு வாரங்களுக்குள் விடுவிக்கவும் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.