தலைமை காவலரை தாக்கியவா் கைது
வேலூரில் தலைமை காவலரை தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.
வேலூா் கன்சால்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் ரவி (50). இவா் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் கடந்த 8-ஆம் தேதி சென்னை-பெங்களூரூ சாலையில் சென்று கொண்டிருந்தாா். அப்போது அவரது இருசக்கர வாகனமும் எதிரே வந்த இருசக்கர வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
தகவலறிந்த வேலூா் வடக்கு காவல் நிலைய தலைமைக் காவலா் சூா்யபிரகாஷ், அங்கு சென்று அவா்களிடம் பேச்சு நடத்தினாா். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ரவி, தலைமை காவலா் சூா்யபிரகாஷை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்கியதாக கூறப்படுகிறது.
இது குறித்து காவல் நிலையத்தில் சூா்யபிரகாஷ் புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ரவியை கைது செய்தனா்.