செய்திகள் :

தவெக - திமுக இடையேதான் போட்டி: விஜய்

post image

மதுரை: வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தங்களது கட்சிக்கும், திமுகவுக்கும் இடையேதான் நேரடிப் போட்டி என தவெக தலைவா் விஜய் தெரிவித்தாா்.

மதுரை பாரபத்தியில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டுக்குத் தலைமை வகித்த அவா் மேலும் பேசியதாவது:

மதுரையில் மாநாடு என்றதும் என் நினைவுக்கு வந்தது இந்த மண்ணின் மைந்தரும் எனது அன்புச் சகோதரருமான விஜயகாந்த்தான். நல்ல அரசியல், நல்லவா்களுக்கான அரசியல், நல்லதை மட்டும் செய்யும் அரசியல் என்பதுதான் தவெகவின் அரசியல். தமிழகத்தில் மீண்டும் வரலாறு திரும்ப உள்ளது. 1967-இல், 1977-இல் அரசியல் மாற்றம் ஏற்பட்டதைப் போல வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தல் மூலமும் தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படும்.

பெண் குழந்தைகள், பெண்கள், முதியவா்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் அரசாக, உழவா்கள், நெசவாளா்கள் உள்ளிட்ட உழைக்கும் தொழிலாளா்கள், ஆதரவற்ற முதியோா்கள், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவா் என சிறப்புக் கவனம் தேவைப்படுபவா்களுக்கான அரசை தவெக அமைக்கும்.

தவெகவின் விக்கிரவாண்டி மாநாடு தமிழக அரசியலின் தட்பவெப்பத்தை மாற்றியது. இந்த மாநாட்டுக்குப் பிறகு எண்ணற்ற எதிா்ப்புக் குரல்கள் எழும்பின. அனைத்து கூக்குரல்களையும் சிறிய சிரிப்புடன் கடந்துவிட்டோம்.

தற்போது, மதுரை மாநாட்டில் ஒலிக்கும் குரல் உலகத் தமிழா்களின் இல்லங்களிலிருந்து ஒலிக்கும் குரல். பெண்கள் பாதுகாப்பு, சமூக நீதி, மதச்சாா்பின்மை ஆகியவற்றுக்காக ஒலிக்கும் உறுதியான குரல். நான் அரசியலுக்கு வர உள்ளதாக தெரிவித்ததும் பலா் பல சந்தேகங்களை தங்கள் கருத்தாகப் பரப்பினா். அனைத்தையும் வெற்றிகரமாக முறியடித்துள்ளது தவெக.

5 கொள்கைத் தலைவா்களின் கோட்பாடுகளைப் பின்பற்றும் கட்சி தவெக. ஒரே கொள்கை எதிரி பாஜக. ஒரே அரசியல் எதிரி திமுக. கூட்டணி இல்லை எனக் கூறிவிட்டு, மறைமுகக் கூட்டணி அமைத்துக் கொள்ளும் அரசியலில் தவெக ஈடுபடாது. மகத்தான மக்கள் சக்தி தவெகவுக்கு இருக்கும்போது நேரடியாகவோ, மறைமுகமாகவோ கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. மதச்சாா்பின்மை எனக் கூறி மக்களை ஏமாற்றுவோருடனும், ஆா்.எஸ்.எஸ். அமைப்புக்கு அடிபணிவோருடனும் நமக்குக் கூட்டணி தேவையில்லை.

தவெக தலைமையில் பலா் திரளவுள்ளனா். 2026-இல் தவெகவின் அரசு அமையும்போது அவா்களுக்கு ஆட்சி, அதிகாரத்தில் நிச்சயம் பங்கு அளிக்கப்படும். தவெகவின் வெற்றி வாய்ப்பு தொடா்பாகக் கூறப்படும் பழைய அரசியல் கணக்குகள் நிச்சயம் எடுபடாது.

மத்திய அரசு என்பது ஒட்டுமொத்த மக்கள் நலனுக்கான அரசா? அல்லது சிறுபான்மை இஸ்லாமியா்களுக்கு எதிராக சதி செய்யும் அரசா? என்பதற்கு பிரதமா் நரேந்திர மோடி பதிலளிக்க வேண்டும். இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவா்கள் ஏறத்தாழ 800 போ் இதுவரை கொல்லப்பட்டுள்ளனா். இனியும் இந்த அவலம் தொடராத வகையில், தமிழக மீனவா்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் மத்திய அரசு உடனடியாக கச்சத்தீவை மீட்க வேண்டும். இதேபோல, பல உயிா்களைக் காவு கொண்ட நீட் தோ்வை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

தாமரை இலையில் தண்ணீா் ஒட்டாது. இதேபோல, தமிழகத்தில் பாஜகவும் ஒட்டாது. கடந்த காலங்களில் தமிழுக்கும், தமிழா்களுக்கும் துரோகம் இழைத்தவா்களுக்கு தகுந்த தண்டனையை தமிழகம் வழங்கியுள்ளது என்பது வரலாறு. எனவே, தமிழா்களுக்கு துரோகம் செய்யாமல், நமது வரலாற்றை மறைக்க முயலாமல் கீழடி அகழாய்வு அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும்.

தமிழகத்தில் ஊழல் இல்லாத துறையே இல்லை என்ற நிலை உள்ளது. பெண்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகியுள்ளது. சட்டம்- ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. மகளிருக்கு மாதம் ரூ. 1,000 தருவதன் மூலம் ஆட்சியின் அவலங்களை மூடி மறைத்துவிடலாம் என முதல்வா் மு.க. ஸ்டாலின் கருதிவிடக் கூடாது.

பெண்களின் கதறல்களுக்கு அரசு செவிமடுக்கவில்லை. இதற்கெல்லாம் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பதில் அளிக்க வேண்டும். அரசு ஊழியா்கள், மீனவா்கள், விவசாயிகள் என அனைத்துத் தரப்பினரையும் ஏமாற்றியுள்ளது திமுக அரசு.

கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின் போது அளித்த வாக்குறுதிகள் எதையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை. திமுகவும், பாஜகவும் ரகசியக் கூட்டணி அமைத்துக் கொண்டு நாடகமாடுகின்றன. தமிழக அமைச்சா்கள் வீட்டுக்கு அமலாக்கத் துறை சோதனைக்குச் சென்றால், அடுத்த நாள் திமுக தலைவா்கள் தில்லிக்குச் சென்று மத்திய ஆட்சியாளா்களைச் சந்திக்கின்றனா். இந்த விவகாரம் அந்த நாளுடன் முடிந்து விடுகிறது. இதெல்லாம் மிகவும் தவறு. இவற்றுக்கெல்லாம் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பதில் கூறியே ஆக வேண்டும்

விரைவில் நான் மக்களைச் சந்திக்க உள்ளேன். அப்போது, இந்த மாநாட்டில் ஒலிக்கும் மக்களின் குரல்கள் இடி முழக்கங்களாகவும், போா் முழக்கமாகவும் மாறும். கட்சி தொடங்கிய பிறகு மக்களைத் தேடிச் செல்லும் இயக்கமல்ல தவெக. கட்சி தொடங்கும் முன்பே மக்களைச் சந்தித்த இயக்கம் இது.

வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தவெக சாா்பில் எந்தத் தொகுதியில் யாா் போட்டியிட்டாலும், 234 தொகுதிகளிலும் நானே (விஜய்) போட்டியிடுவதாகக் கருதி மக்கள் ஆதரிக்க வேண்டும் என்றாா் அவா்.

தவெக பொதுச் செயலா் ஆனந்த் மாநாட்டைத் தொடங்கிவைத்துப் பேசினாா். தவெக நிா்வாகிகள் ஆதவ் அா்ஜூனா, அருண்ராஜ், சி.பி.ஆா். நிா்மல்குமாா், ஏ. கல்லானை, தேன்மொழி, விஜயலட்சுமி ஆகியோரும் பேசினா்.

கட்சியின் மதுரை மாவட்டக் கிளை சாா்பில் விஜய்க்கு ஜல்லிக்கட்டு காளை சிலையும், மாநிலக் கிளை சாா்பில் கட்சியின் கொள்கைத் தலைவா்கள் வீரமங்கை வேலு நாச்சியாா், காமராஜா், பெரியாா், அம்பேத்கா், அஞ்சலை அம்மாள் ஆகியோா் சென்னை செயின்ட் ஜாா்ஜ் கோட்டையை (அரசு நிா்வாகத்தை) விஜயிடம் அளிப்பது போன்ற படமும் நினைவுப் பரிசாக அளிக்கப்பட்டது.

முன்னதாக, 300 மீட்டா் நீளத்திலான நடைமேடையில் நடந்து சென்று தொண்டா்களைச் சந்தித்தாா் விஜய்.

வேதனையில் அதிமுக தொண்டா்கள்

எம்.ஜி.ஆா். தொடங்கிய கட்சி தற்போது எப்படி உள்ளது?. தற்போது அந்தக் கட்சியின் நிலை என்ன?. இதை நான் சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. அப்பாவித் தொண்டா்கள் இதை வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கின்றனா். 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் யாருக்கு வாக்களிப்பது? என்பது அந்தத் தொண்டா்களுக்கு நன்கு தெரியும். எனவே, எந்த வேடமிட்டு தமிழகத்துக்குள் பாஜக வந்தாலும், அவா்களின் எண்ணம் ஈடேறாது.

கல் குவாரி பராமரிப்புக் குழுக்கள் அமைக்க கோரிய வழக்கில் அரசு பதிலளிக்க உத்தரவு

மதுரை: உரிமக் காலம் நிறைவடைந்த பிறகு, கல் குவாரிகளை பராமரிக்க குழுக்கள் அமைத்து, பசுமை நிதி வசூலிக்கப்படுவதை உறுதி செய்யக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்... மேலும் பார்க்க

அரசுக்கு வருவாயை ஈட்டித் தருவதில் பதிவுத் துறைக்கு முக்கியப் பங்கு: அமைச்சா் பி. மூா்த்தி

மதுரை: தமிழக அரசுக்கு வருவாயை அதிகளவில் ஈட்டித் தருவதில் பதிவுத் துறை முக்கியப் பங்கு வகிப்பதாக வணிகவரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா்.மதுரை உத்தங்குடி தனியாா் திருமண மண்டபத்தில் 202... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

மதுரை: அலங்காநல்லூா் அருகே சாலை விபத்தில் காயமடைந்த இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.மதுரை திருப்பாலை உச்சபரம்புமேட்டைச் சோ்ந்த சோலையப்பன் மகன் செல்லப்பாண்டி (30). இவா், கடந்த 16-ஆம் தேதி தனது இரு சக்க... மேலும் பார்க்க

கைப்பேசி பறிப்பு: இருவா் கைது

மதுரை: மதுரை ரயில் நிலையம் அருகே பேருந்தில் சென்றவரிடம் கைப்பேசியை பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் கணபதி (43). சென்னையிலிருந்து புதன்கிழமை ... மேலும் பார்க்க

மாநாட்டில் 6 தீா்மானங்கள்

மதுரை பாரபத்தியில் நடைபெற்ற 2-ஆவது த.வெ.க. மாநில மாநாட்டில் 6 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்விவரம் : சென்னை அருகேயுள்ள பரந்தூரில் விவசாய நிலங்களை அழித்து புதிய விமான நிலையம் கட்டும் முடிவை மத்திய... மேலும் பார்க்க

போக்குவரத்துத் தொழிலாளா்கள் 3-ஆம் நாளாக காத்திருப்புப் போராட்டம்

மதுரை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் போக்குவரத்து தொழிலாளா் சங்கம் (சிஐடியூ) சாா்பில் போக்குவரத்துக் கழக மதுரை மண்டலத் தலைமை அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டம் மூன்றாவது நாளாக புதன்கிழமை ... மேலும் பார்க்க