தாணே: 3 நாள்களில் 10 கரோனா பாதிப்புகள் உறுதி!
மகாராஷ்டிரத்தின் தாணே மாவட்டத்தில் கடந்த 3 நாள்களில் 10 கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
தெற்காசிய நாடுகளில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் இந்தியாவின் பல்வேறு மாவட்டங்களிலும் கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மகாராஷ்டிரத்தின் தாணே நகரில் கடந்த 3 நாள்களில் 10 கரோனா பாதிப்புகள் உறுதியாகியுள்ளதால், அங்குள்ள மருத்துவமனைகள் அனைத்தும் தயார்நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக, தாணே நகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதிக்கப்பட்ட நோயாளிகள் அனைவரிடமும் லேசான அறிகுறிகள் மட்டுமே தென்படுவதாகவும், அவர்கள் அனைவரும் தங்களது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், தாணே நகராட்சி ஆணையர் சௌரப் ராவ், பொதுநலத் துறை மற்றும் மருத்துவமனைகள் அனைத்தும் எச்சரிக்கையுடன் தயார்நிலையில் இருக்கவும், கரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சை தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார்.
இந்தத் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த, அம்மாநில தலைமைச் சுகாதார ஆணையர் மருத்துவர் சேத்னா நிதில், உயர்நிலை அதிகாரிகளுடன் நேற்று (மே 23) ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
அதன்பின்னர், அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
’தேவையான அளவுக்கு மருந்துக்கள் அனைத்து மருத்துவ நிலையங்களிலும் சேமிக்கப்பட்டுள்ளன மற்றும் கரோனா பரிசோதனைக் கருவிகளும் தயார்நிலையிலுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கரோனா சிகிச்சைக்காக அங்குள்ள முக்கிய மருத்துவமனைகளில் படுக்கைகள் தயார்நிலையிலுள்ளதாகவும், இந்தத் தொற்றுப் பரவல் தற்போது கட்டுப்பாட்டிலுள்ளதால் மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க:பினராயி விஜயனுக்குப் பிறந்தநாள்: பிரதமர் உள்பட தலைவர்கள் வாழ்த்து!