தாமிரபரணியில் கழிவு நீர் கலக்கும் விவகாரம்: நீதிபதிகள் ஆய்விற்கு முன் மாநகராட்சி நடவடிக்கை!
2018, தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரைச் சேர்ந்த காமராசு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், "நெல்லை தாமிரபரணி ஆற்றில் பழமையான படித்துறைகள், மண்டபங்கள் சேதமடைந்து வருகின்றன. இவற்றைப் பழைமை மாறாமல் சீரமைத்துப் பராமரிக்கவும், ஆற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கவும் உத்தரவிட வேண்டும்" என மனுத்தாக்கல் செய்தார்.
ஆறாண்டுகளுக்குப் பிறகு மார்ச் 11ல் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி வழங்கிய தீர்ப்பில், ‘தாமிரபரணியில் உள்ளாட்சிகளின் கழிவுநீர் கலக்கக் கூடாது.
‘மண்டபங்கள், படித்துறைகளை இந்து அறநிலையத்துறை சீரமைக்க வேண்டும்’ என, தீர்ப்பளித்தனர். 16 துறையினருக்கு அந்த உத்தரவை அமல்படுத்தவும் அனுப்பினர்.
ஆனால் ஆற்றில் கழிவு நீர் கலப்பது நின்ற பாடில்லை. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாதது குறித்து மீண்டும் மேல்முறையீடு செய்யப்பட்டது.
நவம்பர் 5ல் மாநகராட்சி ஆணையர் சுகபுத்ரா ஆஜராக மதுரை உயர் நீதிமன்றம் கிளை உத்தரவிட்டது.
நெல்லை மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராகி, “மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க பல கட்டங்களாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். இரண்டாவது கட்டப்பணிகள் டிசம்பர் மாதம் நிறைவடைந்து விடும். மூன்றாவது கட்டப்பணி 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவடைந்து விடும். அதன்பிறகு நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் நேரிடையாக கலக்காது” என தெரிவித்தார்.
இதற்கிடையில், தற்போதைய நிலை குறித்து நவம்பர் 10ல் நாங்கள் தாமிரபரணியை ஆய்வு செய்ய வருகிறோம் என, நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி தெரிவித்தனர்.
நீதிபதிகள் வருகையை ஒட்டி நவம்பர் 8, தமிரபரணியில் சாக்கடை அதிக அளவில் கலக்கும் இடங்களில் துாய்மை பணியாளர்களை கொண்டு சுத்தப்படுத்தும் பணி நடந்தது. நீதிபதிகள் செல்லும் பாதையையும் பெருக்கி துாய்மைப்படுத்தினர்.