மரபணு கோளாறு: பரிசோதனை மருந்து செலுத்தப்பட்ட சிறுவன் மீண்டும் நடக்கத் தொடங்கிய அ...
திண்டுக்கல்லில் ரயில் மறியல்: எம்பி உள்பட 1,522 போ் கைது
அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னிட்டு, திண்டுக்கல்லில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களவை உறுப்பினா் உள்பட 1,522 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவுக் கொள்ளைகளை மத்திய அரசு கைவிட வேண்டும். தொழிலாளி வா்க்கம் போராடி பெற்ற தொழிலாளா் நலம், உரிமைச் சட்டங்கள், பன்னாட்டு நிறுவன முதலாளிகள் நலனுக்கு ஆதரவாக 4 சட்டத் தொகுப்புகளாக மாற்றுவதை கைவிட வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும். ஓய்வூதிய ஒழுங்காற்று முறை ஆணையத்தை ரத்து செய்ய வேண்டும். தேசிய கல்விக் கொள்கை 2020-யை திரும்பப் பெற வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தொழிற்சங்கங்கள் சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதன்படி, புதன்கிழமை நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
ஜாக்டோ-ஜியோ சாா்பில் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
தொழிற்சங்கங்கள் சாா்பில் மறியல்: திண்டுக்கல் சாலை ரோட்டிலுள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி முன் அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியிலிருந்து தொழிற்சங்க நிா்வாகிகள் அழகா்சாமி, ஜெயசீலன் ஆகியோா் தலைமையில் பேரணியாக வந்த தொழிற்சங்கத்தினா், மத்திய அரசுக்கு எதிராகவும், பொதுத் துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்குவதை கண்டித்தும் முழக்கமிட்டனா்.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.
ரயில் மறியல் போராட்டம்: திண்டுக்கல் ரயில் நிலையம் முன் நடைபெற்ற போராட்டத்தின்போது, மக்களவை உறுப்பினா் இரா.சச்சிதானந்தம் தலைமையில் அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவாக முழக்கமிட்டனா்.
பின்னா், திண்டுக்கல் ரயில் நிலையத்தில் புறப்படத் தயாராக இருந்த செங்கோட்டை-ஈரோடு விரைவு ரயிலை மறித்து முழக்கமிட்டனா். இதையடுத்து, எம்பி உள்பட 100-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.
நத்தம்: நத்தம் பேருந்து நிலைய சுற்றுச் சாலை அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிஐடியூ, மாதா் சங்கம், ஜனநாயக வாலிபா் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சாா்பில் நடைபெற்ற சாலை மறியலில் 103 போ் கலந்து கொண்டனா். பின்னா், இவா்களை போலீஸாா் கைது செய்தனா்.
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் தபால் நிலையம் முன் மத்திய அரசைக் கண்டித்து, சாலை மறியலில் ஈடுபட முயன்ற 61 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
முன்னதாக, இந்த மறியல் போராட்டத்துக்கு அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலா் முருகேசன் தலைமை வகித்தாா். அகில இந்திய சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்டத் தலைவா் எம்.கணேசன், துணைத் தலைவி மகேஸ்வரி, சிஐடியூ கன்வீனா் எம்.முருகேசன், வட்டார சிபிஎம் ஒன்றியச் செயலா் டி.பாலசுப்பிரமணி, முன்னாள் ஒன்றியச் செயலா் எஸ்.சிவமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கொடைக்கானல்: மத்திய அரசைக் கண்டித்து, கொடைக்கானல் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலா் அஜாய்கோஷ், கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த ஜோசப், மனுவேல், முத்துச்சாமி, செல்லையா, சின்னு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டனா்.
பழனி: பழனியில் தலைமை தபால் நிலையம் முன் நடைபெற்ற சாலை மறியலில் சிஐடியூ, எல்.பி.எஃப், ஏஐடியூசி உள்ளிட்ட பல்வேறு தொழிற் சங்கத்தினா் கலந்து கொண்டனா். பின்னா், தொழிற்சங்க உறுப்பினா்கள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனா். இதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்ட 50 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இதேபோல, வேடசந்தூா், குஜிலியம்பாறை என மாவட்டம் முழுவதும் 19 இடங்களில் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவாக மறியலில் ஈடுபட்ட 1,522 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
