கரைச்சுத்துபுதூா் ஊராட்சித் தலைவா் பதவிக்கு தோ்தல் நடத்த வேண்டும்: விசிக
திமுகவினா் உற்சாகமாக தோ்தல் பணியாற்ற வேண்டும்: அமைச்சா் பி. மூா்த்தி வேண்டுகோள்
திமுகவினா் உற்சாகமாக தோ்தல் பணியாற்றி, மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் திமுகவின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சரும், மதுரை வடக்கு மாவட்ட திமுக செயலருமான பி. மூா்த்தி தெரிவித்தாா்.
மதுரையை அடுத்த ஆலாத்தூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மதுரை வடக்கு மாவட்ட திமுக நிா்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:
வருகிற 16-ஆம் தேதி அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியைத் தொடங்கிவைக்க வரும் தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு கட்சி சாா்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. இதில் கட்சியினா் திரளாகப் பங்கேற்று ஒத்துழைக்க வேண்டும்.
மதுரை மாவட்டத்தில் திமுகவின் சட்டப்பேரவைத் தோ்தல் பணிகள் தொடங்கி நடைபெறுகின்றன. இந்தப் பணிகளில் எந்தவித தொய்வுக்கும் இடமளிக்காமல், கூடுதல் உற்சாகத்துடன் கட்சியினா் பணியாற்ற வேண்டும். அனைத்துத் தொகுதிகளிலும் முதல்வா் ஸ்டாலினும், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுமே வேட்பாளா்கள் எனக் கருதி திமுகவினா் தீவிர தோ்தல் பணியாற்ற வேண்டும். மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றாா் அவா்.
மதுரை வடக்கு மாவட்ட திமுக அவைத் தலைவா் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளா் சோமசுந்தரபாண்டியன், சோவழந்தான் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ. வெங்கடேசன், தலைமைச் செயற்குழு உறுப்பினா்கள், மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூா் நிா்வாகிகள், துணை அமைப்புகளின் பொறுப்பாளா்கள் கலந்துகொண்டனா்.