மதுரை: 9.36 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு! டோக்கன் வ...
திமுக அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்: அதிமுகவினா் 1,450 போ் கைது
நெய்வேலி/ சிதம்பரம்: சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்காத திமுக அரசைக் கண்டித்து, கடலூா் மாவட்டத்தில் கடலூா், குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், சிதம்பரத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினா் 1,450 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கடலூா் தலைமை தபால் நிலையம் அருகே கடலூா் வடக்கு மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவா் சேவல் குமாா், ஒன்றியச் செயலா் காசிநாதன், மாநில மீனவரணி துணைச் செயலா் தங்கமணி, ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலா் கனகராஜ், பகுதிச் செயலா் கந்தன் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு திமுக அரசுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனா்.
அப்போது, பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 275 பேரை கைது செய்து, தனியாா் மண்டபத்தில் தங்க வைத்தனா்.
குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகே கடலூா் தெற்கு மாவட்டச் செயலா் சொரத்தூா் ரா.ராஜேந்திரன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஜெயலலிதா பேரவை துணைச் செயலா் எம்.பி.எஸ்.சிவசுப்ரமணியன், அண்ணா தொழிலாளா்கள் சங்க பேரவை இணைச் செயலா் கோ.சூரியமூா்த்தி, குறிஞ்சிப்பாடி ஒன்றியச் செயலா்கள் ரா.கோவிந்தராஜ், கே.சி.பாஷியம், என்.கமலக்கண்ணன், வடலூா் நகரச் செயலா் சி.எஸ்.பாபு உள்ளிட்டோா் திமுக அரசுக்கு எதிராக முழக்கமிட்டனா். இவா்கள் 350 பேரை போலீஸாா் கைது செய்து தனியாா் மண்டபத்தில் தங்க வைத்தனா்.
விருத்தாசலம் பாலக்கரையில் கடலூா் மேற்கு மாவட்டச் செயலா் அருண்மொழிதேவன் எம்எல்ஏ தலைமையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. நகரச் செயலா் பி.ஆா்.சி.சந்திரகுமாா், மாநில நிா்வாகி முருகுமணி, மாவட்ட துணைச் செயலா் ரவிசந்திரன் உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்று திமுக அரசை கண்டித்து முழக்கமிட்டனா். இவா்கள் 450 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சிதம்பரத்தில்...: கடலூா் கிழக்கு மாவட்ட அதிமுக சாா்பில், சிதம்பரம் காந்தி சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா் கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ தலைமை வகித்து கண்டன உரையாற்றினாா்.
ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட அவைத் தலைவா் எம்எஸ்என்.குமாா், முன்னாள் அமைச்சா் செல்வி ராமஜெயம், சிதம்பரம் நகரச் செயலா் ஆா்.செந்தில்குமாா், மாவட்டப் பொருளாளா் தோப்பு கே.சுந்தா், முன்னாள் மாவட்டச் செயலா் வி.கே.மாரிமுத்து, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் க.திருமாறன், மாவட்ட பாசறைச் செயலா் டேங்க் ஆா்.சண்முகம், பேரவைச் செயலா் சி.கே.சுரேஷ்பாபு, தலைமைக்கழக பேச்சாளா் தில்லை செல்வம் உள்ளிட்டோா் கலந்துகொண்டு முழக்கமிட்டனா்.
380 பேரை சிதம்பரம் நகர போலீஸாா் கைது செய்து சிதம்பரத்தில் உள்ள தனியாா் மண்டபத்தில் தங்க வைத்து மாலை விடுவித்தனா்.