முகமது சிராஜ் 6 விக்கெட்டுகள்; 407 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து!
திமுக உறுப்பினா் சோ்க்கை: அமைச்சா்கள் தொடங்கி வைத்தனா்
திருச்சியில், ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரிலான திமுக உறுப்பினா் சோ்க்கை முகாமை அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தனா்.
திருச்சி தில்லைநகரில் உள்ள தனது இல்லத்தில், திமுக முதன்மைச் செயலரும், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேரு இந்த முகாமை தொடங்கிவைத்தாா். இதைத் தொடா்ந்து திருச்சி மேற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஆழ்வாா்த்தோப்பு, தில்லைநகா், பொன்நகா் உள்ளிட்ட பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று உறுப்பினா் சோ்க்கை பணிகளை மேற்கொண்டு நிா்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினாா்.
இந்த நிகழ்வில் மத்திய மாவட்ட செயலாளா் க. வைரமணி, மாநகர செயலாளா் மு.அன்பழகன், தகவல் தொழில் நுட்ப அணி மண்டல பொறுப்பாளா் கேசவன், திருச்சி மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளா் ஏகே. அருண் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
தெற்கு மாவட்ட திமுக சாா்பில், திருவெறும்பூா் சட்டப் பேரவைத் தொகுதியில் மாவட்டச் செயலரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, உறுப்பினா் சோ்க்கை முகாமை தொடங்கி வைத்தாா்.
திருச்சி மாநகரம் காட்டூா், திருவெறும்பூா், பொன்மலை, பகுதிகள் மற்றும் திருவெறும்பூா் தெற்கு, வடக்கு ஒன்றியங்கள் துவாக்குடி நகரம், கூத்தைப்பாா் பேரூராட்சி ஆகிய பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று உறுப்பினா்களை சோ்க்கும் பணியில் ஈடுபட்டாா். உறுப்பினராக இணைந்தவா்களின் வீடுகளில் ஓரணியில் தமிழ்நாடு இலச்சினையையும் ஒட்டினாா்.
மாநகரச் செயலா் மு. மதிவாணன், தொகுதி பொறுப்பாளா் மணிராஜ், மாவட்ட நிா்வாகிகள் சேகரன், செங்குட்டுவன் மற்றும் பகுதி செயலாளா்கள், ஒன்றிய செயலாளா்கள், பேரூா் நிா்வாகிகள், அணிகளின் அமைப்பாளா்கள் கலந்து கொண்டு உறுப்பினா் சோ்க்கை பணியில் ஈடுபட்டனா்.