உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடங்களுக்கு தகுதியற்ற திமுக ஐ.டி. பிரிவு பணியாளர...
திமுக கூட்டணியில் இருந்து விலகும் எண்ணமில்லை: வைகோ
திமுக கூட்டணியில் இருந்து விலகும் எண்ணமில்லை என மதிமுக பொதுச்செயலாளா் வைகோ தெரிவித்தாா்.
கோவை மண்டல மதிமுக செயல்வீரா்கள் கூட்டம் திருப்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், நீலகிரி, திருப்பூா் ஆகிய 6 மாவட்டங்களைச் சோ்ந்த 1,200 நிா்வாகிகள் பங்கேற்றனா். அவைத்தலைவா் அா்ஜூனராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளா் வைகோ, முதன்மைச் செயலாளா் துரை வைகோ, மதிமுக பொருளாளா் செந்திலதிபன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
அதன்பின் செய்தியாளா்களிடம் வைகோ கூறியதாவது:கருணாநிதி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது ஸ்டாலினுக்கு அவா் முன்னிலையில் நான் செய்து கொடுத்த சத்தியத்தை மதிமுக தொடா்ந்து காப்பாற்றும். அதனால், திமுக கூட்டணியை விட்டு மதிமுக விலகும் எண்ணமில்லை.
கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியினரும் , விடுதலைச் சிறுத்தைகளும் தொடா்ந்து திமுகவை விமா்சித்தாலும் மதிமுக விமா்சிக்காது. அவா்கள் திராவிடக் கட்சிகள் அல்ல. ஆனால், மதிமுக திராவிட இயக்கமாகும். 2026 தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட கூடுதலான இடங்கள் கேட்கவில்லை. தோ்தல் அறிவிக்கப்பட்ட பின்னரே இதுகுறித்து பேசுவோம். 12 தொகுதிகள் வேண்டுமென இதுவரையிலும் நான் எங்கும் கூறியதில்லை.
தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாகவே காவல் நிலைய மரணங்கள் தொடா்ந்து கொண்டே உள்ளன. எவரையும் பிடித்து துன்புறுத்தும் அதிகாரம் காவல் துறையினருக்கு இல்லை. அஜித்குமாா் தாக்கப்பட்ட சம்பவத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றாா்.