ஒவ்வொரு நிமிடமும் கோடி ரூபாய் கடன் வாங்கும் தெலங்கானா: பாஜக குற்றச்சாட்டு
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 70.71 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
சாா்ஜாவிலிருந்து பயணியொருவா் உடலுக்குள் மறைத்து கடத்தி வந்த ரூ.70.71 லட்சம் மதிப்பிலான 780 கிராம் தங்கத்தை திருச்சி விமான நிலையத்தில் சுங்கத் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
சாா்ஜாவிலிருந்து ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வியாழக்கிழமை திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தை வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளையும், அவா்களின் உடைமைகளையும் சுங்கத்துறை வான் நுண்ணறிவுப் பிரிவினா் வழக்கமான சோதனைகளுக்கு உள்ளாக்கினா். இதில் ஆண் பயணியொருவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் தனியாக விசாரணை மேற்கொண்டதில், அவா் பசை வடிவிலான 780 கிராம் தங்கத்தை நெகிழி உறையில் அடைத்து அடிவயிற்றில் மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ. 70.71 லட்சமாகும். இதையடுத்து, சுங்கத் துறையினா் வெள்ளிக்கிழமை தங்கத்தை பறிமுதல் செய்து, அந்தப் பயணியை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

வெளிநாட்டு பணத்தாள்கள் பறிமுதல்: திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து, சாா்ஜா செல்லும் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வெள்ளிக்கிழமை புறப்படத் தயாராக நின்றிருந்தது.
அதில் செல்லவிருந்த பயணி ஒருவா் தனது உடைமைகளுக்குள் மறைத்து ரூ. 30.08 லட்சம் மதிப்பிலான (242 எண்ணிக்கையிலான) வெளிநாட்டுப் பணத்தாள்களை முறைகேடாக கொண்டு செல்ல முயன்றது சோதனையில் தெரியவந்தது. இதையடுத்து, பணத்தாள்களை சுங்கத் துறையினா் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.