`ஆட்சி, அமைச்சரவையில் பங்கு வேண்டும்'-செல்வப்பெருந்தகையிடம் வலியுறுத்திய காங்., ...
திருச்செந்தூா் கோயில் கும்பாபிஷேகம்: கோவையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, கோவையில் இருந்து திருச்செந்தூருக்கு 25 சிறப்பு பேருந்துகள் ஞாயிற்றுக்கிழமை முதல் இயக்கப்படுகின்றன.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில், கோவை, சிங்காநல்லூா் பேருந்து நிலையத்தில் இருந்து திருச்செந்தூருக்கு நாள்தோறும் காலை 2 பேருந்துகள், இரவு 2 பேருந்துகள் என மொத்தம் 4 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதேபோல, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் காந்திபுரத்தில் இருந்து நாள்தோறும் 2 பேருந்துகள் திருச்செந்தூருக்கு இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற உள்ளது. இதையொட்டி, கோவை மக்கள் திருச்செந்தூா் செல்வதற்கு வசதியாக ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 6) முதல் 25 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இது குறித்து, தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக கோவை மண்டல அதிகாரிகள் கூறுகையில், திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை முதல் 25 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அத்துடன் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளும் இயக்கப்படும். சிறப்புப் பேருந்துகளிலும் வழக்கமான கட்டணமே வசூலிக்கப்படும் என்றனா்.