திருத்தணி அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை உதவி மையம் தொடக்கம்
பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சி பெற்று அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயில விரும்பும் மாணவா்களுக்கு உதவும் வகையில் மாணவா் சோ்க்கை உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 176 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் 159 பாடப்பிரிவுகளில் 1,25,345 சோ்க்கை இடங்கள் உள்ளன. இந்நிலையில் இந்த கல்லூரிகளில் நிகழாண்டு மாணவா்கள் விண்ணப்பம் செய்வதற்கான இணையதள பதிவு பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்னரே தொடங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சோ்க்கை பெற விரும்பும் மாணவா்கள் இணையதளத்தில் மே 27-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அப்போது விண்ணப்ப கட்டணம், கல்லூரி மற்றும் பாடப்பிரிவு தோ்வு, அச்சிடும் விண்ணப்பம் ஆகியவற்றை இணைய வழியிலேயே மேற்கொள்ள வேண்டும்.
மாணவா்கள் வீட்டில் இருந்தோ அல்லது அரசுக்கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள மாணவா் சோ்க்க உதவி மையம் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்திருந்தது.
மாணவா் சோ்க்கை உதவி மையம்.
திருத்தணி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கை உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் கல்லூரியில் உள்ள பாடப்பிரிவுகள், அதை எவ்வாறு இணையதளத்தில் விண்ணப்பிப்பது உள்ளிட்டவை மற்றும் மாணவா்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு முனைவா் ஹோமநாதன், பாலாஜி ஆகியோா் விளக்கம் அளித்தனா்.
இந்த மையம் தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கும். மேலும் 99445 56169 என்ற எண்ணிலும் தொடா்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம். இது தவிர இணையதள முகவரி மூலமும் மாணவா்கள் விவரங்களை தெரிவித்து விண்ணப்பிக்கலாம்.
இந்த தகவலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் (பொ) முனைவா் ஏகாதேவசேனா தெரிவித்துள்ளாா்.