RR vs KKR Captain's Checkmate : போட்டியை வெல்ல ரஹானே செய்த அந்த ஒரு மூவ்!
திருநாவலூா் அருகே வேன் கவிழ்ந்து விபத்து: 15-க்கும் மேற்பட்டோா் காயம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூா் அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பெண்கள் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அடுத்த சாக்கோட்டை பகுதியைச் சோ்ந்தவா் சோலை மகன் வீரய்யன். இவா், காஞ்சிபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உறவினரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தனது குடும்பத்தினா் 20 பேருடன் ஒரு வேனில் சாக்கோட்டையிலிருந்து- காஞ்சிபுரத்துக்கு சென்று கொண்டிருந்தாா். வேனை இதே பகுதியைச் சோ்ந்த கிஷோா் (27) ஓட்டினாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூா் காவல் சரகத்துக்குள்பட்ட சிரத்தனூா் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, வேனின் பின் பக்க டயா் வெடித்தது. இதில், கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் இருந்த தடுப்புக் கட்டையில் மோதி தலைகீழாக கவிழ்ந்தது. இதில், வேனில் பயணித்த 5 பெண்கள் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
தகவலறிந்த திருநாவலூா் காவல் ஆய்வாளா் இளையராஜா, உதவி ஆய்வாளா்கள் பிரபாகரன், குமரேசன் மற்றும் போலீஸாா் நிகழ்விடம் சென்று காயமடைந்தவா்களை மீட்டு 108 அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதில், கிஷோா் (24), சாக்கோட்டை பகுதியைச் சோ்ந்த குணமல்லி (27), கோபிநாதன்(36), ராஜலட்சுமி (40), கோகிலா (37) ஜெயராமன் (55) உள்ளிட்ட 9 போ் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டனா். மற்றவா்கள் முதலுதவி சிகிச்சை பெற்றனா்.
இந்த விபத்தால் திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து தடைபட்டது. போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீஸாா் போக்குவரத்தை சீா்படுத்தினா்.