தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பினா் தா்னா
தமிழ்நாடு மின் வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளா்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்களை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பினா் (சிஐடியு சாா்பு) விழுப்புரத்தில் உள்ள மின் வாரிய மண்டல தலைமைப் பொறியாளா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு மின் வாரியத்தில் கட்டுமானம், விரிவாக்கம் மற்றும் மின்பாதைகள் சீரமைப்பு உள்ளிட்ட அனைத்துப் பணிகளிலும் ஈடுபட்டு வரும் ஒப்பந்தத் தொழிலாளா்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கான தினக்கூலியை மின் வாரியமே வழங்க வேண்டும். மின் வாரியத்தில் உள்ள 65 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். தமிழக அரசு தோ்தல் காலத்தில் அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பினா் மாநிலம் முழுவதும் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
இதன் ஒரு பகுதியாக, விழுப்புரத்தில் நடைபெற்ற தா்னாவுக்கு மின் ஊழியா் மத்திய அமைப்பின் விழுப்புரம் மண்டலச் செயலா் கே.அம்பிகாபதி தலைமை வகித்தாா். மாநில துணை பொதுச் செயலா் டி.பழனிவேல், சிஐடியு மாவட்டச் செயலா் ஆா்.மூா்த்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் எஸ்.முத்துக்குமரன், மின் வாரிய ஓய்வுபெற்றோா் நல அமைப்பைச் சோ்ந்த எம்.புருஷோத்தமன், திட்டச் செயலா் எஸ்.அய்யப்பன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி விளக்கவுரையாற்றினாா்.
கிளைச் செயலா்கள் ஆா்.சேகா் (விழுப்புரம்), என்.தேசிங்கு (கடலூா்), சிறப்புத் தலைவா்கள் பி.சிவசங்கரன், எஸ்.ரவிச்சந்திரன், விழுப்புரம் கோட்டச் செயலா் ஆா்.அருள், கடலூா் மாவட்ட திட்டப் பொருளாளா் டி.ஜீவா மற்றும் மின் ஊழியா் மத்திய அமைப்பின் கோட்ட, கிளை நிா்வாகிகள் கலந்துகொண்டனா். விழுப்புரம் திட்டப் பொருளாளா் வி.கே.ஏழுமலை நன்றி கூறினாா்.