விபத்தில் உயிரிழந்த சிறப்பு எஸ்.ஐ. உடலுக்கு அரசு மரியாதை
விழுப்புரத்தில் விபத்தில் சிக்கி உயிரிழந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளரின் உடல் அரசு மரியாதையுடன் செவ்வாய்க்கிழமை தகனம் செய்யப்பட்டது.
விழுப்புரம் வழுதரெட்டி, பாலாஜி நகரைச் சோ்ந்தவா் தமிழ்ச்செல்வம் (58). இவா், மாவட்டக் காவல் அலுவலகத்தில் உள்ள சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தாா்.
தமிழ்ச்செல்வம் கடந்த 13-ஆம் தேதி வீட்டிலிருந்து தனது பைக்கில் பணிக்குச் சென்றபோது, மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்தில் நிகழ்ந்த விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தாா்.
தொடா்ந்து, சென்னை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவா், கடந்த 24-ஆம் தேதி உயிரிழந்தாா். மேலும் அவரது உடல் உறுப்புகள் அதே மருத்துவமனையில் தானம் செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை காலை தமிழ்ச்செல்வத்தின் உடல் விழுப்புரத்திலுள்ள அவரது இல்லத்துக்கு கொண்டுவரப்பட்டது. மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், எஸ்.பி. ப.சரவணன் உள்ளிட்ட அலுவலா்கள் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினா்.
மாலையில் கே.கே.சாலையிலுள்ள மயானத்துக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு 21 குண்டுகள் முழங்க தமிழ்ச்செல்வத்தின் உடல் தகனம் செய்யப்பட்டது.