திருப்பதி கபிலேஸ்வரஸ்வாமி கோயிலில் பவித்ரோற்சவம்
திருப்பதி: திருப்பதி கபிலேஸ்வர சுவாமி கோவிலில் பவித்ரோற்சவம் திங்கட்கிழமை தொடங்கியது.
இதையொட்டி காலை முதல் கைங்கா்யங்கள் விமரிசையாக நடத்தப்பட்டன. காலையில் சுப்ரபாதம், அபிஷேகம், அலங்காரம், அா்ச்சனை, நிவேதனம் ஆகியன நடைபெற்றன. பின்னா், விநாயகா், சுப்ரமணிய சுவாமி, கபிலேஸ்வர சுவாமி, காமாட்சி அம்மன், சண்டிகேஸ்வரா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகளுக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடந்தது. பின்னா் அவா்களுக்கு அலங்காரம் நடைபெற்றது.
மாலையில் கலச ஸ்தாபனம், கலச பூஜை, அக்னி காரியம், ஹோமம், லகு பூா்ணாஹுதி, கிரந்தி பவித்ரா பிரதிஷ்டை(பல வண்ண பட்டு நூலிழைகளால் ஆன மாலைகள்) நடைபெற்றது.
செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) கிரந்தி பவித்ர சமா்ப்பணமும், மாலையில் யாகசாலை பூஜையும், ஹோமமும் நடைபெறும்.
புதன்கிழமை (ஜூலை 9)- ஆம் தேதி, மஹாபூா்ணாஹுதி, கலஷோத்வாசனம் மற்றும் பவித்ர சமா்ப்பணம் செய்யப்படும். மாலை 6 மணிக்கு, ஸ்ரீ கபிலேஸ்வர சுவாமி, ஸ்ரீ காமாக்ஷி அம்மன், ஸ்ரீ விக்னேஸ்வர சுவாமி, ஸ்ரீ சுப்ரமணியஸ்வாமி மற்றும் ஸ்ரீ சண்டிகேஸ்வர சுவாமி ஆகிய பஞ்சமூா்த்திகள் நகர வீதிகளில் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்படுவா்.
இந்த நிகழ்ச்சியில் கோயில் அதிகாரிகள் மற்றும் அா்ச்சகா்கள் பங்கேற்றனா்.