கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க இலங்கையுடன் புதிய ஒப்பந்தம்: மத்திய அரசுக்கு முதல்வ...
திருப்பத்தூர்: சிதிலமடைந்த பேருந்து நிழற்குடை; அச்சத்தில் பயணிகள்! - சீரமைக்கப்படுமா?
திருப்பத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திரியாலம் என்ற கிராமத்தின் அருகே மிகவும் சிதிலமடைந்த நிலையில் பயணியர் நிழற்குடை ஒன்று உள்ளது. இவ்விடத்தில் நாட்றம்பள்ளி, பச்சூர், பர்கூர் மற்றும் பிற ஊர்களுக்குச் செல்வதற்காகப் பயணிகள் இங்கு நின்று பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பயணியர் நிழற்குடை இருந்தும், அதைப் பயன்படுத்த முடியாமல் வெளியே நிற்க வேண்டிய நிலை உள்ளது என்று பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து நம்மிடம் வந்து பேசிய சமூக ஆர்வலர்கள், ``இந்தப் பகுதியைச் சுற்றி தனியார்ப் பள்ளிகள், அரசு மருத்துவமனை, வங்கிகள் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் உள்ளன. ஆனால் , இவ்வளவு முக்கியமான இடத்தில் சிறிது நேரம் ஒதுங்கக்கூட ஒரு நல்ல நிலையில் பயணியர் நிழற்குடை இல்லையே!

உள்ளே நிற்பதற்கு அல்ல... அந்தப் பக்கம் சென்றாலே பெரிய அச்சம் ஏற்படுகிறது. எந்த ஓர் அசம்பாவிதமும் ஏற்படும் முன் விரைந்து நிழற்குடையைச் சீரமைத்துத் தர வேண்டும்" என்றனர்.
இது தொடர்பாகப் பொதுமக்களிடம் விசாரித்தபோது, ``இந்தச் சூழல் வெகுகாலமாக இப்படியேதான் உள்ளது. எந்த அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை, நாங்களும் எங்கள் தரப்பில் உயர் அதிகாரிகளுக்குப் பல முறை மனு கொடுத்தோம். ஆனால் எதுவும் மாறாமல் இதே சூழல் நிலவிக் காணப்படுகிறது. சனி, ஞாயிறு போன்ற நாள்களில் பக்கத்துக் கடைகள் பூட்டிய நிலையில் இருக்கும்.




அதனால் பேருந்து வரும் வரை அங்கு நின்றுகொண்டு காத்திருப்போம். மற்ற நாள்களில் நெடுஞ்சாலை ஓரமே வெட்ட வெளியில் நின்று கொண்டு இருப்போம். அண்மையில்கூட டூவீலர் ஒன்று மாணவி மீது இடித்து விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. உள்ளேயும் நிற்க முடியாமல்... வெளியேவும் நிற்க முடியாமல் தினந்தோறும் அச்சத்தில் பயணம் மேற்கொள்கிறோம். போதாததற்கு இந்த வெயில் காலம் வேறு நெருங்கி விட்டது. பழுதடைந்த நிலையில் உள்ள பழைய பயணியர் நிழற்குடையை அகற்றி, புதிய நவீன நிழற்குடை அமைக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.