கடலூரில் பூச்சிக்கொல்லி மருந்து ஆலையில் விபத்து: ரசாயனக் கசிவால் பாதிக்கப்பட்...
திருப்புவனத்தில் நாளை நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறையின் சாா்பில், நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் வாயிலாக தமிழகம் முழுவதும் சுமாா் 1,256 உயா்தர மருத்துவ மையங்கள் மூலம் கட்டணமில்லா மருத்துவச் சேவைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சிவகங்கை மாவட்டத்தில், வாரத்துக்கு ஒரு முகாம் வீதம் மொத்தம் 39 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ளன. இதன்படி, திருப்புவனம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை (செப்.6) நடைபெறவுள்ளது.
இந்த மருத்துவ முகாமில், ரூ.3,000 மதிப்பிலான ரத்தப் பரிசோதனை, இசிஜி உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் அனைத்தும் இலவசமாக மேற்கொள்ளப்படும். மேலும், பொது மருத்துவம், இருதய மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், சித்த மருத்துவம், இயன்முறை மருத்துவம், அறுவைச் சிகிச்சை மருத்துவம், மகப்பேறு மருத்துவம் உள்ளிட்ட 17 வகையான சிகிச்சைகளுக்குச் சிறப்பு மருத்துவ நிபுணா்கள் மூலம் ஆலோசனைகள் வழங்கப்படும்.
மேலும், இந்த முகாம் மூலம், முதல்வரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை, மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவச் சான்றிதழ்கள் போன்றவற்றையும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
முகாமுக்கு வருகை தரும் பொதுமக்கள் தங்களுடைய ஆதாா் அட்டையின் நகலைக் கொண்டு வருதல் அவசியமாகும். மேலும், காப்பீடு அட்டை வேண்டி விண்ணப்பிப்பவா்கள் தங்களது குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, கிராம நிா்வாக அலுவலரிடம் தங்களது ஆண்டு வருமானம் ரூ. 1.20 லட்சத்துக்கும் குறைவாக உள்ளதற்கான சான்று ஆகியவற்றை கொண்டுவர வேண்டும் என்றாா் அவா்.