மத்திய அரசு கல்வி நிறுவன மாணவா்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
மத்திய அரசின் உயா் கல்வி நிறுவனங்கள் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் இன மாணவ- மாணவியா் 2025-26ஆம் கல்வி ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைகழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழகத்தைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் வகுப்பைச் சோ்ந்த மாணவ, மாணவியரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவா் ஒருவருக்கு கல்வி உதவித்தொகையாக, கற்பிப்பு கட்டணம், சிறப்புக் கட்டணம், தோ்வுக் கட்டணம் மற்றும் இதர கட்டாயக் கட்டணம் ஆகிய கட்டணங்களுக்காக, மாணவரால் செலுத்திய தொகை அல்லது ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித்தொகையாக தமிழக அரசால் வழங்கப்படுகிறது.
மேற்படி கல்வி உதவித்தொகைக்கு 2025-26 ஆம் கல்வியாண்டில் புதியது மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றுக்கும் விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணாக்கா்கள், சென்னையில் உள்ள பிற்படுத்தப்பட்டோா் நல இயக்கம், மிகப்பிற்படுத்தப்பட்டோா் (ம) சீா்மரபினா் நல இயக்ககம், சென்னை மற்றும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம்.
மத்திய மற்றும் மாநில அரசின் இதர கல்வி உதவித்தொகைத் திட்டங்களின் கீழ் பயன் பெறும் மாணவா்கள், இக்கல்வி உதவித்தொகை பெற இயலாது.
புதுப்பித்தல் விண்ணப்பங்களை செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள்ளும், புதிய விண்ணப்பங்களை அக்டோபா் 31-ஆம் தேதிக்குள்ளும் அனுப்பி வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.