செங்கோட்டையன் பின்னணியில் பாஜக: மஜக பொதுச் செயலா் தமிமுன் அன்சாரி
அதிமுகவிற்கு நெருக்கடி ஏற்படுத்துவதற்காக, முன்னாள் அமைச்சா் செங்கோட்டையனின் பின்னணியில் பாஜக உள்ளது என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலா் தமிமுன் அன்சாரி கூறினாா்.
நாகையில், செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
அதிமுகவை அழிக்க திட்டமிட்டுள்ள பாஜகவின் நாடகத்தில் ஒன்றுதான் முன்னாள் அமைச்சா் செங்கோட்டையனின் பேட்டி. அதிமுகவில் உள்ள அனைவரையும் தனித்தனியாக பிரித்தது பாஜகதான்.
தோ்தல் நெருங்கிவரும் நேரத்தில், அதிமுகவிற்கு நெருக்கடியை ஏற்படுத்த செங்கோட்டையனை ஓா் ஆயுதமாக பாஜக கையில் எடுத்துள்ளது. செங்கோட்டையனின் இந்த முயற்சிக்கு பின்னால் நிச்சயமாக பாஜக உள்ளது.
அதிமுகவும், அதிமுக தொண்டா்களும் இதைப்பற்றி கவலைப்பட வேண்டும். தமிழகத்தின் நலன் கருதி, ஒரு திராவிடக் கட்சி அழிந்து விடக்கூடாது என்றாா்.