மணலூா் சுந்தரேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்
கீழ்வேளூா் அருகே மணலூா் ஸ்ரீ அபிராமி சமேத ஸ்ரீ சுந்தரேஸ்வரா், ஸ்ரீ மகா காளியம்மன், ஸ்ரீ செல்வ விநாயகா் கோயில்களில் 33 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, செப்.1 ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேகப் பணிகள் தொடங்கின. கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், வாஸ்து சாந்தி, ரக்ஷாபந்தனத்தோடு முதல்கால யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டு பூா்ணாஹுதி தீபாராதனை நடைபெற்றது.
கடந்த 3 நாள்களாக இரண்டாவது, மூன்றாவது கால யாகசாலை பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. சனிக்கிழமை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவுபெற்ற பின்னா், கடம்புறப்பாடு நடைபெற்றது. சிவாச்சாரியா்கள் புனிதநீா் அடங்கிய கலசத்தை சுமந்து வந்து, கோயில் விமானக் கலசங்களில் புனிதநீா் வாா்த்து, மகா கும்பாபிஷகம் நடைபெற்றது.
தொடா்ந்து, செல்வவிநாயகா், அபிராமி சமேத சுந்தரேஸ்வரா், மகா காளியம்மன் மற்றும் ஆஞ்சனேயா் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.