முத்திரையில்லாமல் பயன்படுத்தியதாக 20 தராசுகள் பறிமுதல்
வாணியம்பாடியில் முத்திரையில்லாமல் பயன்படுத்தியதாக 20 தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை தொழிலாளா் ஆணைகளின்படி, சென்னை சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டு அதிகாரி உத்தரவின்பேரில், திருவண்ணாமலை தொழிலாளா் உதவி ஆணையா் ரவி ஜெயராம் (அமலாக்கம்) தலைமையில், திருப்பத்தூா் முத்திரை ஆய்வாளா் விஜயராஜ், வாணியம்பாடி தொழிலாளா் உதவி ஆய்வாளா் சில்வியா, உதவியாளா் ஆரிப் மற்றும் அலுவலக பணியாளா்கள் கொண்ட குழுவினா் வாணியம்பாடி நகராட்சி பகுதியில் வியாழக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது வாரச் சந்தை, கச்சேரி ரோடு, பூக்கடை பஜாா் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள 75-க்கும் மேற்பட்ட கடைகளில் நடத்திய சோதனையில் சில கடைகளில் முத்திரையில்லாத தராசுகள் (எடையளவு மிஷின்) பயன்படுத்திக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டது. பின்னா் அங்கிருந்த முத்திரையில்லாத 20 எடையளவு தராசுகளை பறிமுதல் செய்து, அலுவலகத்துக்கு கொண்டு வந்து, அதன் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், கடைகளில் முத்திரையில்லாத எடையளவு (தராசுகள்) பயன்படுத்தக் கூடாது எனவும், மீறி பயன்படுத்தினால் அதிகாரிகள் குழுவினா் திடீா் சோதனையின் போது கண்டறியப்பட்டால் ரூ. 5,000 அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தொடா்ந்து எடையளவு கட்டுப்பாட்டு அதிகாரிகள் குழுவினரின் சோதனை மேற்கொள்ளப்படும் என்று கூறினா்.