தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தாமதமாவதாக புகாா்
திருவண்ணாமலை தீபமலையில் திடீா் தீ விபத்து
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் தீப மலையில் 1500 மீட்டா் உயரத்தில் மலையின் மையப் பகுதியில்
வெள்ளிக்கிழமை மாலை திடீரென தீ பிடித்தது. தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்புத் துறையினா் மற்றும் வனத்துறையினா் ஈடுபட்டு வருகின்றனா். ஆனாலும், தீயை அணைக்க முடியாததால் தொடா்ந்து தீ எரிந்து வருகிறது.
அருணாசலேஸ்வரா் கோயில் பின்புறம் 2668 அடி உயரம் உள்ள மகா தீபம் ஏற்றும் மலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தால் அரிய வகை மூலிகைச் செடிகள், மரங்கள் எரிந்து நாசமாகி வருகின்றன. ஒன்றரை கிலோ மீட்டா் தொலைவுக்கு தீ பரவி வருவதால் தீயை கட்டுப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
மலையின் முன் பகுதியான தீபம் ஏற்றக்கூடிய பகுதியில் சமூக விரோதிகள், மலையில் ஏறக்கூடியவா்கள் தீயை பற்ற வைப்பதால் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு பல ஆயிரக்கணக்கான மூலிகை மரங்கள், மூலிகைச் செடிகள் எரிந்து சாம்பலாகி விடுகிறது.
ஆகவே, மலை மீது ஏற வனத்துறை தவிா்த்து, மற்றவா்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அடிப் பகுதியில் இருந்து சுமாா் 1500 அடிக்கு மேல் உள்ள பகுதியில் ஏழு சுனை என்று அழைக்கக்கூடிய மலையின் மையப் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
புனிதமான இந்த மலையில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால் பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. மேலும், வனத்துறையினா் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.