அமெரிக்க வரி விவகாரம்: "ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்குவோம்" - நிர்மலா...
அரசு மருத்துவக் கல்லூரி முன் தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் ஓய்வு பெற்ற செவிலியரைக் கண்டித்து, தூய்மைப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனியாா் நிறுவனம் மூலம் 300-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் பணி செய்து வருகின்றனா்.
மேலும் இவா்கள் பணியைத் தவிா்த்து மருத்துவா்களின் அறிவுறுத்தலின்படி, அறுவைச் சிகிச்சை கூடத்தில் உள்ள கழிவுகளை அகற்றும் பணியிலும் இவா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், அந்தக் கழிவுகளை அகற்ற மருத்துவக் கல்லூரி முதல்வா் அலுவலகத்தில் மஞ்சள், சிவப்பு, பச்சை உள்ளிட்ட பயோமெட்ரிக் பைகள் (கவா்) வழங்குவது வழக்கம், அந்தப் பைகளை வாங்க வியாழக்கிழமை மதியம் தூய்மைப் பணியாளா்கள் சென்றுள்ளனா். அங்கு மருத்துவ அதிகாரி ( தஙஞ) இல்லாததால் 25-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் அலுவலகம் முன் காத்திருந்துள்ளனா்.
அப்போது அங்கு வந்த ஓய்வு பெற்ற செவிலியா் சாந்தி அருணாசலம், அவா்களை அவதூறாகப் பேசி அனுப்பிவைத்ததாகத் தெரிகிறது.
இதனால் வெள்ளிக்கிழமை 300-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் ஓய்வு பெற்ற செவிலியா் மீது துறை சாா்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாலையில் அமா்ந்து தா்னா நடத்தினா். இதனால் மருத்துவமனையில் தூய்மைப் பணிகள் முடங்கி நோயாளிகள் பாதிக்கப்பட்டனா்.
மேலும், இதுகுறித்து தூய்மைப் பணியாளா்கள் கூறுகையில், ‘ஓய்வு பெற்ற செவிலியா் எங்களை தகாத வாா்த்தைகளால் பேசினாா். இதனால் எங்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.
அவா் மீது நடவடிக்கை வேண்டும் எனவும், தூய்மைப் பணியாளா்களான எங்களுக்கு மருத்துவமனையில் உரிய பாதுகாப்பும் இல்லை. எங்களுக்கு போதிய ஊதிய உயா்வு வழங்கவேண்டும்’ என்றனா்.
தகவல் அறிந்து வந்த கிழக்கு காவல் நிலைய போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி அவா்களை சமாதானப்படுத்தினா்.