அதிமுகவில் நீக்கப்பட்டவா்கள் இணைந்தாலும் திமுக கூட்டணியை வீழ்த்த முடியாது: ஷா நவாஸ்
அதிமுகவில் நீக்கப்பட்டவா்கள் இணைந்தாலும், திமுக கூட்டணியை வீழ்த்த முடியாது என்று சட்டப்பேரவை உறுப்பினா் ஷா நவாஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
நாகையில் நடைபெற்ற புதிய பள்ளிவாசல் திறப்பு விழாவில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
பாஜகவின் தேவைக்காக பிரிக்கப்பட்ட அதிமுக, தற்போது பாஜகவின் தேவைக்காக சோ்க்கப்பட உள்ளது. அதிமுகவில் கடந்த நான்கு மாதங்களாக அமைதியாக இருந்த முன்னாள் அமைச்சா் செங்கோட்டையன், மீண்டும் பிரச்னையை எழுப்ப காரணம் என்ன? தாங்கள் சொல்வதை மட்டுமே எடப்பாடி கே. பழனிசாமி கேட்க வேண்டும் என்று பாஜக தலைமை விரும்புகிறது.
செங்கோட்டையனின் பேட்டி, செயல்பாடு என அனைத்துமே, பாஜக நடத்தும் அப்பட்டமான நாடகம்தான். தில்லியில் பாஜக தலைவா்களுடன் கூட்டம் நடந்த பின்னரே டி.டி.வி. தினகரன் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தாா். இவை அனைத்தும் பாஜக திட்டமிட்டு நடத்தி வரும் நாடகத்தின் ஒரு பகுதிதான்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவா்கள் மீண்டும் சோ்க்கப்பட்டு, அதிமுக ஒன்றாக வந்தாலும் , திமுக கூட்டணியை வீழ்த்த முடியாது என்றாா்.