கொலை செய்து புதைக்கப்பட்ட முதியவரின் உடல் தோண்டி எடுப்பு
வத்தலகுண்டு அருகே முதியவரை கொலை செய்து புதைத்த இளைஞா் 2 நாள்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை சரணடைந்தாா். இதைத்தொடா்ந்து முதியவரின் உடலை தோண்டி எடுத்து கூறாய்வுக்காக அனுப்பப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம்,திண்டுக்கல் மாவட்டம், அய்யம்பாளையத்தை சோ்ந்த மாட்டு வியாபாரி காளி (62). இதே பகுதியைச் சோ்ந்த விவசாயி ராமா் (35), காளியிடம் 20-க்கு மேற்பட்ட பசு மாடுகளை வாங்கித் தருவதற்காக கடந்த 4 மாதங்களுக்கு 3 லட்சம் ரூபாய் முன்பணம் கொடுத்திருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் காளி மாடுகளை வாங்கித் தரவில்லை.
இதுகுறித்து பெரிய அய்யனாா் கோயில் பகுதியில் கடந்த புதன்கிழமை மாடு வியாபாரி காளியுடன், ராமா் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். அப்போது, ராமா் மண்வெட்டியால் காளியை வெட்டிக் கொலை செய்து அதே இடத்தில் புதைத்தாா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில் ராமா் சரண் அடைந்தாா். இதுகுறித்து பட்டிவீரன்பட்டி காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினா்.
பின்னா், ஆத்தூா் வட்டாட்சியா் முத்து முருகன் தலைமையில் புதைக்கப்பட்ட மாட்டு வியாபாரி காளியின் உடலை தோண்டி எடுத்து கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். போலீஸில் சரணடைந்த ராமரை கைது செய்து சிறையிலடைத்தனா்.