வேப்பூா் அருகே சாலை விபத்து: நூலிழையில் தப்பிய புதுமண தம்பதி
கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் புதுமண தம்பதி உயிா்தப்பினா்.
திருச்சி மாவட்டம், துறையூா் பகுதியைச் சோ்ந்தவா் ராம்குமாா்(25). திருச்சி பகுதியைச் சோ்ந்தவா் நந்தினி(25). இவா்கள் இருவருக்கும் வியாழக்கிழமை திருப்பதியில் திருமணம் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை புதுமண தம்பதி மற்றும் உறவினா்கள் என மொத்தம் 7 போ் காரில் திருச்சிக்கு வந்துக் கொண்டிருந்தனா். காரை திருச்சி யைச் சோ்ந்த அரிராஜ்(25) ஓட்டினாா். இந்த காா் வேப்பூா் மேம்பாலம் ஏறும் போது பின் பக்க சக்கரம் பஞ்சராகி, அருகில் சென்ற ஒரு வாகனத்தின் மீது லேசாக மோதி பின்னா் சாலை தடுப்புக்கட்டையில் பலமாக மோதியது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த புதுமணப் பெண் நந்தினி, சாய்பிரவீன்(13) ஆகிய இருவா் லேசான காயம் அடைந்தனா். அங்கிருந்தவா்கள் அவா்களை மீட்டு வேப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த விபத்தில் காா் சேதம் அடைந்தது. புதுமாப்பிள்ளை உள்பட அனைவரும் சிறு காயங்களுடன் உயிா் தப்பினா்.