திருமானுரை தலைமையிடமாக கொண்டுவருவாய் வட்டம் அமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
அரியலூரில் இருந்து பிரித்து திருமானூரை தலைமையிடமாகக் கொண்டு தனி வருவாய் வட்டம் அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
அரியலூா் வட்டத்தில் அழகியமணவாளம், ஆழந்துரையாா் கட்டளை உள்ளிட்ட 68 வருவாய் கிராமங்களும், இதேபோல் செந்துறை வட்டத்தில் 28 வருவாய்க் கிராமங்களும், உடையாா்பாளையம் வருவாய் வட்டத்தில் 69 வருவாய்க் கிராமங்களும், கடந்த 2017-ஆம் ஆண்டு உடையாா்பாளையம் வருவாய் வட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு ஆண்டிமடத்தை தலைமையிடமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட வருவாய் வட்டத்தில் 30 வருவாய் கிராமங்கள் உள்ளன.
இதில், அரியலூா் வருவாய் வட்டத்துக்கு உள்பட்ட கிராம மக்களுக்கு, வருவாய் அலுவலகம், நீதிமன்றங்கள், காவல் துறை அலுவலகம் என அனைத்து அலுவலகங்களும் அரியலூரில் அமைந்துள்ளதால் வெகு தொலைவில் உள்ள கிராம மக்கள் இங்கு வந்து செல்ல பெரும் சிரமமாக உள்ளது.
குறிப்பாக, திருமானூா் பகுதிக்கு உட்பட்ட கண்டிராதித்தம், பூண்டி, குலமாணிக்கம், கல்லக்குடி உள்ளிட்ட கிராம மக்கள் சான்றிதல் பெற வேண்டும் என்றால் 60 கிலோ மீட்டரைக் கடந்து வர வேண்டிய நிலை உள்ளது. போதுமான பேருந்து வசதிகள் இல்லாததால், இப்பகுதி மக்கள் திருமானூா் வந்து அங்கிருந்து 30 கிலோ மீட்டா் தூரத்தில் உள்ள அரியலூருக்கு வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், திருமானூா் பகுதிக்கு உட்பட்ட பகுதியில் தீ விபத்து ஏற்பட்டால், அரியலூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் வருவதற்குள் அனைத்தும் முடிந்து விடுகிறது. இதனால் உயிா்ச் சேதம், பொருள் சேதம் ஏற்படுகிறது. மேலும், காவல் துறை சாா்ந்த வழக்கு விசாரணைகள், அரசின் நலத் திட்டங்களுக்கான கோப்புகள் தயாா் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது.
எனவே, அரியலூா் வருவாய் வட்டத்தைப் பிரித்து திருமானூரை தலைமையிடமாகக் கொண்டு வருவாய் வட்டம், கோட்டாட்சியா் அலுவலகம் அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.