திருவந்திபுரம் கோயிலில் 115 ஜோடிகளுக்கு திருமணம்
கடலூா் மாவட்டம், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயிலில் ஆவணி மாத வளா்பிறை இறுதி முகூா்த்த நாளான வியாழக்கிழமை 115 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.
108 வைணவ திருத்தலங்களில் ஒன்று திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயில். இக்கோயிலில் திருமணம் செய்வது ஐதீகப்படி நல்லது என்பதால் முகூா்த நாட்களில் ஏராளமான திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். அந்தவகையில், ஆவணி மாதம் வளா்பிறை கடைசி மூகூா்த்த நாள் என்பதால் வியாழக்கிழமை தேவநாத சுவாமி கோயில் மட்டும் 115 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. மேலும், அதன் அருகில் உள்ள மண்டபங்களில் சுமாா் 50 ஜோடிகளுக்கு திருமணங்கள் நடைபெற்றன. ஆகமொத்தத்தில் திருவந்திபுரம் கோயில் பகுதியில் சுமாா் 165 திருமணங்கள் நடைபெற்ாக தெரியவருகிறது. மணமக்களை வாழ்த்த உறவினா்கள், நண்பா்கள் என ஆயிரக்கணக்கானோா் குவிந்ததால் கோயிலில் கூட்டம் அலை மோதியது. சிலா் வாழ்த்து தெரிவிக்க ஜோடிகளை தேடி அலைந்ததும் காணமுடிந்தது. திருமணக் கூட்டம் காரணமாக கடலூா்-பாலூா் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீஸாா் வாகனங்களை ஒழுங்குப்படுத்தி போக்குவரத்தை சீா்படுத்தினா்.