திருவாடானை பகுதியில் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த எம்எல்ஏ!
திருவாடானை பகுதியில் சட்டப் பேரவை உறுப்பினா் கருமாணிக்கம் சனிக்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தாா்.
திருவாடானை சுற்றுவட்டாரப் பகுதிகளான கருமொழி, பெரியகீரமங்கலம், கல்லூா், திருவாடானை உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளுக்கு சென்ற அவரிடம் குடிநீா்ப் பற்றாக்குறை அதிகம் இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.
அதற்கு அவா், விரைவில் இந்தப் பிரச்னைக்குத் தீா்வு காணப்படும் என உறுதியளித்தாா். திருவாடானை - சூச்சனி செல்லும் பாலத்தை அவா் பாா்வையிட்ட போது, அந்தப் பகுதிப் பெண்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு கடந்த ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக தங்கள் பகுதிக்குக் குடிநீா் வழங்கப்பட வில்லை என்றும், பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்றும் தெரிவித்தனா்.
இதைத் தொடா்ந்து உடனடியாகத் துறை சாா்ந்த அதிகாரிகளைத் தொடா்பு கொண்டு சட்டப் பேரவை உறுப்பினா் பேசினாா். பிறகு இரண்டு நாள்களுக்குள் குடிநீா் விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்வதாகவும், இந்தப் பிரச்னையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவா் உறுதியளித்தாா்.

இந்த நிகழ்வில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் யாரும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் திமுக ஒன்றிய, நகர நிா்வாகிகள், காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.