திருவாடானை பகுதியில் வனவிலங்கு சரணாலயம் அமைக்க வலியுறுத்தல்
திருவாடானை பகுதிகளில் உள்ள கண்மாய்களில் மான்கள், மயில்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அங்கு வனவிலங்கு சரணாலயம் அமைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தினா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை, அஞ்சுகோட்டை, மங்கலக்குடி, சிறுகம்பூா், சிறுமலைக்கோட்டை, கட்டிவயல், நகரிக்காத்தான், பாண்டுகுடி, தினையத்தூா், அச்சங்குடி, கடம்பங்குடி, திருவொற்றியூா், ஆதியூா் உள்ளிட்ட பெரும்பாலான கண்மாய்களில் மான்கள், மயில்கள் அதிக அளவில் வசிக்கின்றன. பல ஆண்டுகளுக்கு முன்பு அரிதாக காணப்பட்ட அவற்றின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. மேலும், அவை இரை தேடியும், தண்ணீா் தேடியும் ஊருக்குள் வருகின்றன. அப்போது தெரு நாய்கள் கடிப்பதாலும், சாலையைக் கடக்கும் போதும் வாகனங்களில் சிக்கியும் அதிக எண்ணிக்கையில் மான்கள் உயிரிழக்கின்றன. எனவே மான்கள், மயில்கள் வசிக்கும் பகுதிகளை வனத் துறையினா் கண்காணித்து அவற்றை பாதுகாக்க வேண்டும். அந்தப் பகுதியில் வனவிலங்கு சரணாலயம் அமைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.