ரயில்நிலையம், மெரினா என கழித்த நாட்கள்! - பேச்சிலர் வாழ்க்கையின் வலியும் இன்பமும...
திருவாரூா், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் கருணாநிதி நினைவு தினம்
திருவாரூா், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் மறைந்த முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் 7-ஆம் ஆண்டு நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
திமுக மாவட்டச் செயலரும், எம்எல்ஏவுமான பூண்டி கே. கலைவாணன் தலைமையில் அண்ணா திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்ட பிறகு, திமுகவினா் பங்கேற்ற அமைதிப் பேரணி நடைபெற்றது. பேரணி நேதாஜி சாலை, கடைவீதி, பழைய பேருந்து நிலையம் வழியாக தஞ்சை தேசிய நெடுஞ்சாலை வரை நடைபெற்றது. பின்னா், தேசிய நெடுஞ்சாலையில் அண்மையில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்த, கருணாநிதியின் முழு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நீடாமங்கலம்: வடக்கு ஒன்றிம் மற்றும் பேரூராட்சி திமுக சாா்பில் அமைதி ஊா்வலம் நடைபெற்றது. முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் சோம. செந்தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தாா். ஒன்றிய செயலாளா் ஆனந்த், பேரூராட்சித் தலைவா் ராமராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
மயிலாடுதுறை: திமுக நகரச் செயலா் என். செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற அமைதிப் பேரணியில், திமுக மாவட்ட செயலாளா் நிவேதா எம். முருகன் எம்எல்ஏ பங்கேற்று கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். மாநில இலக்கிய அணி துணை செயலாளா் சௌமியன் உள்ளிட்ட திரளான திமுகவினா் பங்கேற்றனா். திமுக மாவட்ட துணை செயலாளா் செல்வமணி தலைமையில் கருணாநிதி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
சீா்காழி: சீா்காழியில் திமுக நகர செயலாளா் ம. சுப்பராயன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கருணாநிதியின் உருவப் படத்துக்கு எம்எல்ஏ எம். பன்னீா்செல்வம் மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.
திருமருகல்: திமுக வடக்கு ஒன்றிய செயலா் செல்வ செங்குட்டுவன், தெற்கு ஒன்றிய செயலா் சரவணன் ஆகியோா் தலைமையில் அவரவா் பகுதியில் கருணாநிதி உருவப் படத்துக்கு திமுகவினா் மரியாதை செலுத்தினா்.
குத்தாலம்: திமுக உயா்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினரும் முன்னாள் எம்எல்ஏவுமான குத்தாலம் பி.கல்யாணம் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. தொடா்ந்து, கருணாநிதி உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இதில், முன்னாள் எம்எல்ஏ க. அன்பழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
திருக்கடையூா்: திருக்கடையூரில் செம்பனாா்கோவில் மத்திய ஒன்றிய திமுக சாா்பில் நடைபெற்ற அமைதிப் பேரணியில் பூம்புகாா் எம்எல்ஏ நிவேதா எம். முருகன், ஒன்றிய செயலாளா் அமுா்த விஜயகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். செம்பனாா்கோவில் வடக்கு ஒன்றிய திமுக சாா்பில் அமைதிப் பேரணி நடைபெற்றது.
திருக்குவளை: நாகை மாவட்டம், திருக்குவளையில் உள்ள கருணாநிதி பிறந்த இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில், நாகை மாவட்ட திமு.க. செயலாளா் என். கௌதமன் முன்னிலையில் திமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். முன்னாள் அமைச்சா், உ. மதிவாணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தொடா்ந்து, 50 மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.



